“மக்களுடன் முதல்வர்” முகாமிற்கு சென்று கோரிக்கைகள் மற்றும் புகார்கள் கொடுத்த கோபாலப்பட்டினம் ஜமாத் நிர்வாகம்.
நேற்று செவ்வாய்க்கிழமை மீமிசலில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியர் உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று மக்களுக்கு பலதரப்பட்ட சேவைகள் வழங்கப்பட்டு உடனடியாக தீர்வுகள் கிடைக்கப் பெற்றன.
அந்த வகையில் கோபாலப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் மக்களுடன் முதல்வர் முகாமிற்கு சென்று ஊரக வளர்ச்சித் துறை அலுவலரை நேரில் சந்தித்து ஐந்து கோரிக்கைகள் மற்றும் இரண்டு புகார்கள் கொடுத்தனர்.
கோரிக்கைகள் மற்றும் புகார்கள் பின் வருமாறு:-
புகார்கள்
அண்மையில் கோபாலப்பட்டினத்தில் இரண்டு பிரதான வழிகளில் போடப்பட்ட தார்ச்சாலைகளில் காவல் நிலையம் முதல் பழைய காலனி வழியாக ஊத்து வரை போடப்பட்டு வரும் தார்ச்சாலை மிகவும் தாமதமாக வேலை நடைபெற்று வருவதாகவும்,
மற்றும் ஸ்டேட் பேங்க் முதல் கடற்கரை ஆலமரம் வரை போடப்பட்ட தார்ச்சாலையானது அரசு வழிகாட்டுதலை பின்பற்றாமல், அளவீடுகள் குறைவாகவும், தரமற்ற நிலையில் இருப்பதாகவும் இந்த இரு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர்.
கோரிக்கைகள்
கோபாலப்பட்டினத்தில் குப்பைகள் கொட்ட வழி இல்லாமல் சாலையின் ஓரங்களில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றுவதற்கும், குப்பைகளை கொட்டுவதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்படுத்துவதற்கும்,
வழிபாட்டு தலங்கள் (பள்ளிவாசல்கள்) அனைத்திற்கும் பட்டா வழங்க கோரியும்,
கோபாலப்பட்டினத்தில் பட்டா இல்லாத வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பட்டா வழங்க கோரியும்,
கோபாலப்பட்டினத்தில் தேவைப்படும் இடங்களில் புதிதாக நீர் தேக்க தொட்டிகள் அமைக்க கோரியும்
அதேபோன்று கழிவுநீர் பாதாள சாக்கடை திட்டத்தை செய்து தரக் கோரியும் கோரிக்கைகள் விடுத்தனர்.
புகார்கள் மற்றும் கோரிக்கைகளை பெற்றுக் கொண்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் உங்களுடைய கோரிக்கைகள் மற்றும் புகார்கள் விரைவில் பரிசீலனை செய்து சரி செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.