போலீஸார் மீது தாக்குதல்! ரவுடி துரை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை.
புதுக்கோட்டையில் தைலமர காட்டுக்குள் வைத்து ரவுடி துரை என்பவர் போலீஸாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் மீது 70 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
திருச்சி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ரவுடி துரைசாமி என்கிற எம்ஜிஆர் நகர் துரை. இவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி, உள்ளிட்ட 70 வழக்குகள் உள்ளன. இதில் 4 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதில் 1 கொலை வழக்கில் மட்டும் விடுதலை ஆகிவிட்டார். மீதம் 3 கொலை வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளில் அவர் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில் ரவுடி துரை வம்பன் காட்டுப் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ரவுடி துரையை போலீஸார் பிடிக்க சென்றனர். அப்போது அவரை சுற்றி வளைத்த போது போலீஸாரை ஆயுதத்தால் தாக்கினார். இதில் எஸ்ஐ மகாலிங்கத்தை தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து தற்காப்புக்காக அவரை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டனர். இதில் அவர் உயிரிழந்துவிட்டார். இந்த ரவுடி மீது திருச்சி மட்டுமில்லை தமிழகம் முழுவதும் வழக்குகள் நிலுவையில் இருந்தது.
துரையின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பின்னர் என்கவுன்ட்டர் நடந்த யூகலிப்டஸ் காட்டுப் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரில் சென்று ஆய்வு செய்தார். துரை தாக்கியதில் காயமடைந்த எஸ்ஐ மகாலிங்கம் அரசு மருத்துவமனையில் சிசிக்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
துரையை கடந்த ஆண்டும் போலீஸார் சுட்டு பிடித்தனர் என தெரிகிறது. கடந்த ஆண்டு திருச்சியில் திருட்டு வழக்கிற்காக விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது இவர் தப்பிச் சென்றார். அது முதல் அவரை தேடி வந்த நிலையில் ரவுடி துரை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.