போதையால் சிந்திக்கும் ஆற்றலை இழக்கும் இளம் தலைமுறையினர்: `கூலிப்’ போதைப்பொருளை நாடு முழுவதும் தடை செய்யலாமா? மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.
மதுரை, செப்.13-
போதையால் இளம் தலைமுறையினர் சிந்திக்கும் ஆற்றலை இழந்து வருகின்றனர் என்றும், கூலிப் போதைப்பொருளை நாடு முழுவதும் தடை செய்வது குறித்து மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
`கூலிப்’ போதைக்கு அடிமை
மதுரை ஐகோர்ட்டில் பணியாற்றி வரும் நீதிபதி பரதசக்கரவர்த்தி, ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களை விசாரித்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்த நீதிபதி நேற்று பிற்பகலில் `கூலிப்’ எனும் போதைப்பொருள் விற்ற வழக்கில் ஜாமீன் கேட்டவர்களின் மனுவை விசாரித்தார். பின்னர் இதுசம்பந்தமாக மத்திய, மாநில அரசு வக்கீல்களை தனது அறைக்கு வரவழைத்து ஆலோசனை செய்தார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
தமிழகத்தில் கூலிப் எனும் போதைப்பொருள் விற்பனை செய்தது சம்பந்தமான வழக்கில் ஜாமீன் கோரி ஏராளமான மனுக்கள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படுகின்றன. குறிப்பாக பள்ளி மாணவர்கள் கூலிப் போதைக்கு அடிமையாகி இருப்பது தெரிய வருகிறது.
எவ்வாறு பாதுகாக்க போகிறோம்?
தமிழகத்தில் இதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் இவற்றை விற்க பிற மாநிலங்களில் அனுமதிக்கப்படுகிறது. அங்கிருந்து தமிழகத்திற்கு கடத்தப்பட்டு, மறைமுகமாக இங்கு விற்பனை நடக்கிறது. இத்தகைய பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படுகிறது.
தற்போது பள்ளி மாணவர்கள் சண்டையிட்டுக் கொள்வது போன்ற சம்பவங்கள் அதிகரிக்க போதைப்பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவதுதான் காரணம். இதன்மூலம் இளம் தலைமுறையினர் சிந்திக்கும் ஆற்றலை முற்றிலுமாக இழந்து வருகின்றனர். அவர்களை நாம் எவ்வாறு பாதுகாக்க போகிறோம்?
பாதுகாப்பு நடவடிக்கை
போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களின் கடை 15 நாட்களுக்கு மூடப்படுகிறது. ஆனால் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்ததும் வழக்கம் போல் மீண்டும் அந்த கடை செயல்பட தொடங்கி விடுகிறது.
போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பது, மருத்துவ பரிசோதனைகளை செய்வது என எவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம்? என முடிவு செய்யப்பட வேண்டும். இதனால் மாணவர்களின் கல்வி எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது.
விளக்கம் அளிக்க வேண்டும்
தமிழகத்தில் உள்ள எல்லா பள்ளிகளிலும் “கூலிப்” எனும் போதைப்பொருட்களை பயன்படுத்துபவர்கள் இருப்பதாக தெரிகிறது. எனவே அதனை பாதுகாப்பற்ற உணவுப்பொருள் என அறிவித்து, நாடு முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது? என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். இதுதொடர்பான வழக்கை வருகிற 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.