பொன்னமராவதியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 236 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல், வாலிபர் கைது.
பொன்னமராவதி, ஏப்.5-
பொன்னமராவதியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 236 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புகையிலை பொருட்கள் பறிமுதல்
பொன்னமராவதி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜுலியஸ் சீசர் தலைமையில், இன்ஸ்பெக்டர் பத்மா, சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் தனிப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெள்ளையாண்டிபட்டியில் ஒரு குடோனில் புகையிலைபொருட்கள் விற்பனைக்காக மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கிருந்த 236 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
வாலிபர் கைது
தொடர்ந்து குடோனில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த பூலாங்குறிச்சியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மீனாட்சிசுந்தரம் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.