பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக
10 ஆயிரத்து 214 சிறப்பு பஸ்கள் இயக்கம்: அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு.
சென்னை, ஏப்.16-
பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்து 214 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
10,214 பஸ்கள் இயக்கம்
2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வருகிற 17 மற்றும் 18-ந் தேதிகளில், சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 92 பஸ்களுடன், 2 ஆயிரத்து 970 சிறப்பு பஸ்கள் என 2 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 7 ஆயிரத்து 154 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 2 நாட்களுக்கு 3 ஆயிரத்து 60 சிறப்பு பஸ்களும் என மொத்தமாக 10 ஆயிரத்து 214 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மேற்படி சிறப்பு இயக்க தினங்களில் வருகிற 18-ந் தேதி சென்னையில் இருந்து புறப்பட உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் முன்பதிவு பெரும்பான்மையான தடங்களில் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. தற்போதைய (நேற்றைய) நிலவரப்படி 16-ந் தேதிக்கான (இன்று) 30 ஆயிரத்து 630 முன்பதிவு இருக்கைகளில், ஆயிரத்து 22 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன, 29 ஆயிரத்து 608 இருக்கைகள் காலியாக உள்ளன.
முன்கூட்டியே திட்டமிடுங்கள்
இதே போன்று, 17-ந் தேதிக்கான 31 ஆயிரத்து 308 முன்பதிவு இருக்கைகளில் 6 ஆயிரத்து 475 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 24 ஆயிரத்து 833 இருக்கைகள் காலியாக உள்ளன. எனவே, 18-ந் தேதி கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்த்து 16, 17-ந் தேதிகளில் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.