பேராவூரணி வியாபாரியிடம் பூ அனுப்புவதாக கூறி புல்லை அனுப்பி வைத்து ரூ.18 ஆயிரம் மோசடி, சைபர் கிரைம் போலீசார் விசாரணை.
பேராவூரணி, ஜூலை.22-
பேராவூரணி வியாபாரியிடம் பூ அனுப்புவதாக கூறி புல்லை அனுப்பி வைத்து ரூ.18ஆயிரத்து 200 மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூ வியாபாரி
தஞ்சை மாவட்டம் பேராவூரணி புதிய பஸ் நிலையத்தில் பூ மொத்த வியாபார கடை நடத்தி வருபவர் வீரசேகர் (வயது48). இவர் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட நகரங்களில் மொத்தமாக பல்வேறு ரக பூக்களை கொள்முதல் செய்து பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சில்லறை வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகிறார்.இந்தநிலையில் நேற்று வீரசேகர் செல்போனுக்கு ஓசூரில் இருந்து பேசுவதாக ஒருவர் கூறினார். அப்போது அவர் பேராவூரணியில் உள்ள பூக்கடை உரிமையாளர் ஒருவர் உங்களது செல்போன் நம்பர் கொடுத்தார் என்றும், நான் ஓசூரில் பெரிய பூ கமிஷன் மண்டி வைத்திருப்பதாகவும், உங்களுக்கு தேவையான அனைத்து ரக பூக்களையும் விலை குறைவாக தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய வீரசேகர் சாமந்தி, செண்டிப்பூ, ரோஜா உள்ளிட்ட பூக்கள் தனக்கு தேவை என கூறினார்.
ரூ.18ஆயிரத்து 200 மோசடி
இதையடுத்து ரூ.18,200-க்கு கம்ப்யூட்டர் பில், மூட்டைகளின் படம், லாரிசர்வீஸ் நம்பர் மற்றும் பார்சல் எண்ணிக்கை, பில் நம்பர் அனைத்தையும் வீரசேகருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிவைத்துவிட்டு, பூ மூட்டைகளை தஞ்சையில் வந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மேலும் உடனடியாக ரூ.18,200-ஐ ஆன்லைனில் அனுப்பும்படி கூறியுள்ளார். இதனை நம்பிய வீரசேகர் உடனடியாக அவர் அனுப்பிய நம்பருக்கு ரூ.18,200-ஐ அனுப்பி வைத்துள்ளார்.
பூக்களுக்கு பதிலாக புல்
பின்னர் தஞ்சைக்கு வந்த பூ பார்சலை வீரசேகர் எடுத்து கொண்டு பேராவூரணிக்கு வந்துள்ளார். அங்கு பார்சலை பிரித்து பார்த்த போது அனைத்து பண்டல்களிலும் பூக்களுக்கு பதிலாக திருமண மண்டபங்களில் மணமேடை அலங்காரம் செய்ய பயன்படுத்தும் ஒருவகை புல் மட்டுமே இருந்துள்ளது.இதுகுறித்து தஞ்சை சைபர் கிரைமில் வீரசேகர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பூ அனுப்புவதாக கூறி புல்லை அனுப்பி வைத்து ரூ.18 ஆயிரத்து 200 மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியது.