பெற்றோர்களே உஷார்: சிறுவர்களை குறிவைக்கும் கடத்தல் கும்பல்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினம் அவுலியா நகரில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவன் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களிடம் அவருடைய மற்றொரு வாகனம் பழுது அடைந்து விட்டதாக கூறி உதவி கேட்பது போல் அவர்களை வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளான்.
செல்லும் வழியில் சிறுவர்கள் சுதாரித்துக் கொண்டு கூச்சலிடவே அவர்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்று விட்டான்.
இது தொடர்பாக அச்சிறுவர்கள் தங்களுடைய பெற்றோர்களிடம் வந்து கூறவே அதன் பின்னர் அவுலியா நகர் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது அந்த நபர் கடந்த ஒரு வாரமாகவே அப்பகுதியில் நோட்டமிட்டுள்ளது தெரிய வந்தது.
அதன்பின் இன்று 04.10.24 அவுலியா நகர் பகுதிக்கு வந்த அந்த நபர் சிறுவர்களிடம் பேச்சு கொடுத்து அவர்களை அழைத்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
எனவே பொதுமக்களும் பெற்றோர்களும் தாங்கள் தங்களுடைய பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்,
அடையாளம் தெரியாத நபர்கள் யாரேனும் அவர்களிடம் வந்து கூப்பிட்டாலோ அல்லது ஏதேனும் பொருட்களை கொடுத்தாலோ அவர்களிடம் பேச்சுக் கொடுக்காமலும் பொருட்களை வாங்காமலும் விலகி விட வேண்டும் என்றும் அறிவுறுத்த வேண்டும்.
விவரம் தெரியாத பிள்ளைகளை கடத்துவதை போல் விவரம் தெரிந்த சிறுவர்களையும் கடத்தல் கும்பல் குறி வைத்துள்ளது. எனவே தங்களுடைய பிள்ளைகளுக்கு இது குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.