புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் அறை புதிதாக கட்டப்படுகிறது.
புதுக்கோட்டை, ஜூலை.15-
புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் அறை புதிதாக கட்டப்பட்டு வருகிறது.
அடிப்படை வசதிகள்
நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அம்ரித் திட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மதுரை கோட்ட ரெயில்வேக்குட்பட்ட புதுக்கோட்டை ரெயில் நிலையத்திலும் இத்திட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ரெயில் நிலையத்தில் நுழைவு வாயில் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் ரெயில் நிலையத்தில் முதலாவது மற்றும் 2-வது நடைமேடைகளில் லிப்ட் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இரு சக்கர வாகனங்கள், கார்கள் நிறுத்தும் வகையில் வாகனங்கள் நிறுத்துமிடம் விாிவாக கட்டப்படுகிறது. மேலும் நடைமேடையில் பயணிகளுக்கான இருக்கைகள், மேற்கூரைகள் முழுமையாக அமைக்கும் பணி நடைபெறுகிறது.
பயணிகள் காத்திருக்கும் அறை
இந்த நிலையில் இத்திட்டத்தில் பயணிகள் காத்திருக்கும் அறையும் புதிதாக கட்டப்படுகிறது. ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக பயணிகள் காத்திருக்கும் போது அவர்கள் தனி அறையில் அமருவதற்காக இந்த அறை கட்டப்படுகிறது. முதலாவது நடைமேடையில் இந்த கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ரெயில் நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருக்கும் அறை சற்று சிறிய அளவில் உள்ளது. தற்போது புதிதாக கட்டப்படுவதில் சற்று விரிவாக பயணிகள் அதிகம் பேர் அமரும் வகையில் கட்டப்படுகிறது.
இதேபோல ரெயில் நிலையத்தில் ரெயில்கள் வந்து செல்லும் விவரம் குறித்து அறிய டிஜிட்டல் பலகை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் நடைமேடையில் ரெயில் பெட்டிகள் நிற்கும் இடத்தை காட்டும் கோச் இன்டிகேசன் போர்டும் முதலாவது நடைமேடையில் பொருத்தப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக இத்திட்டத்தில் பணிகள் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.