புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க விழிப்புணர்வு.
புதுக்கோட்டை, மே.24-
புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
குழந்தை திருமணம்
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் உயர்கல்வியில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேநேரத்தில் பிளஸ்-2 முடித்த மாணவிகளில் சிலரை அவர்களது பெற்றோர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வைப்பதாகவும், இது தொடர்பாக கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படுவதாகவும் ஒரு நிகழ்ச்சியில் உயர் அதிகாரி ஒருவர் வேதனையுடன் தெரிவித்தார்.
அதனால் 18 வயது நிரம்பாத சிறுமிகளை திருமணம் செய்து கொடுப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் எனவும், சட்டப்படி குற்றம் எனவும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுமக்களிடம் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
5 திருமணங்கள் நிறுத்தம்
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “கடந்த 2 மாதங்களில் 5 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மாணவிகள் சிலரை மேற்கொண்டு படிக்க வைக்காமல் உறவு முறையில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து விடுகின்றனர். தற்போது முகூர்த்த நாள் அதிகம் வருவதால் குழந்தை திருமணங்கள் நடத்தப்படுவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 1098 என்ற தொலைபேசி எண்ணிற்கு வரும் தகவல்களின் அடிப்படையிலும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். குழந்தை திருமணங்கள் நடைபெறுவது குறித்து தெரிந்தால் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கலாம்” என்றனர்.