புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படை விரைவில் வருகை.
புதுக்கோட்டை, மார்ச்.21-
புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படை 2 கம்பெனிகள் விரைவில் வருகை தர உள்ளது.
வாகன சோதனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை (தனி), புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகள் திருச்சி நாடாளுமன்ற தொகுதியிலும், திருமயம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிகள் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியிலும், விராலிமலை சட்டமன்ற தொகுதி கரூர் நாடாளுமன்ற தொகுதியிலும், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியிலும் அடங்கியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
துணை ராணுவ படை
இந்த நிலையில் அரசியல் கட்சியினர் பிரசாரம் தொடங்கியதும் மாவட்டத்தில் தேர்தல் களம் பரபரப்படையும். இதற்கிடையே தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 2 துணை ராணுவ படை கம்பெனிகள் புதுக்கோட்டைக்கு விரைவில் வர உள்ளது.
இந்த படையினர் பறக்கும் படையினருடன் வாகன சோதனையில் ஈடுபடுதல், சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பணி மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மாவட்டத்தில் சோதனை சாவடிகளில் ஏற்கனவே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நெருங்க… நெருங்க… இந்த சோதனை மேலும் தீவிரமாகும்.