புதுக்கோட்டை அருகே பட்டாசு குடோன் வெடித்து சிதறி வாலிபர் பலி; முதல்வர் இரங்கல்.
விராலிமலை, மே.21-
புதுக்கோட்டை அருகே பட்டாசு குடோன் வெடித்து சிதறி வாலிபர் பலியானார். தீக்காயமடைந்த மற்றொருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பட்டாசு குடோன் வெடித்து சிதறியது
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள அத்திப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் அதே பகுதியில் சொந்தமாக பட்டாசுக் கடை வைத்துள்ளார். முன்புறம் கடையும், பின்புறம் பட்டாசு குடோனும் உள்ளது. தீபாவளி சமயத்தில் விற்பனை செய்த பட்டாசுகள் போக மீதமுள்ள பட்டாசுகள் திருவிழா காலங்களில் விற்பதற்காக குடோனில் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பட்டாசு கடையை விரிவுபடுத்துவதற்காக தகரக்கொட்டகை போடும் பணி நடைபெற்று வந்துள்ளது. அதற்காக நேற்று வெல்டிங் எந்திரம் கொண்டு பணி செய்துள்ளனர். அப்போது அதில் இருந்து தீப்பொறிகள் பரவி குடோனில் இருந்த பட்டாசுகள் மீது பட்டுள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் குடோனில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் அடுத்தடுத்து வெடித்து சிதறியது. இதனால் குடோன் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
வாலிபர் பலி
அப்போது குடோன் உள்ளே நின்று கொண்டிருந்த குடோனின் உரிமையாளரான வேல்முருகனின் தம்பி கார்த்திக் ராஜா (வயது 27) மீது தீப்பிடித்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார். மேலும், அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த சிவனேசன் என்பவர் தீக்காயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்தனர். பின்னர் குடோனில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்த சிவனேசனை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விராலிமலை போலீசார் கார்த்திக் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், உரிய அனுமதியுடன் பட்டாசு கடை மற்றும் குடோன் செயல்பட்டு வந்ததும், வெல்டிங் வைக்கும் பணியின்போது அதிலிருந்து சிதறிய தீப்பொறி பட்டு விபத்து நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து விபத்து ஏற்பட்ட இடத்தை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே ஆகியோர் ஆய்வு செய்தனர். பட்டாசு குடோன் வெடித்து வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முதல்-அமைச்சர் இரங்கல்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், வானதிராயன்பட்டி கிராமம், அத்திப்பள்ளம் என்ற இடத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு கிடங்கில் 20-5-2024 அன்று (நேற்று) பிற்பகல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அத்திப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக்ராஜா (வயது 27) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிவநேசனுக்கு (27) சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், காயம் அடைந்து பாதிக்கப்பட்டவருக்கும் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.