புதுக்கோட்டை அருகே அரசு பள்ளி ஆசிரியர் பணியிட மாறுதலுக்கு எதிர்ப்பு; மாணவர்கள், பெற்றோர் பாசப் போராட்டம்.
அன்னவாசல், ஜூலை.9-
புதுக்கோட்டை அருகே அரசு பள்ளி ஆசிரியர் பணியிட மாறுதலில் செல்ல எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், பெற்றோர் பாசப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு பள்ளி
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள காட்டுப்பட்டி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை 69 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் குடுமியான்மலை அண்ணா நகரை சேர்ந்த சின்னக்கண்ணு (வயது 58) என்பவர் கடந்த 19 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
தற்போது நடைபெற்று வரும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில் பணியிட மாறுதலுக்கு ஆசிரியர் சின்னக்கண்ணு விண்ணப்பித்தார். இதில் அவருக்கு சொக்கம்பட்டி எனும் கிராமத்தில் உள்ள பள்ளிக்கு பணியிட மாறுதல் கிடைத்தது. இந்த நிலையில் ஆசிரியர் சின்னக்கண்ணு பணியிட மாறுதலில் வேறு பள்ளிக்கு செல்வதை அப்பள்ளியின் மாணவ-மாணவிகள் விரும்பவில்லை. அவர்களது பெற்றோரும் அவர் இந்தப்பள்ளியிலே தொடர்ந்து பணியாற்ற விரும்பினர்.
பாசப்போராட்டம்
அவர் பள்ளியில் மாணவ-மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உதவியதோடு, அவர்களிடம் அன்போடு பழகி கவனித்து வந்துள்ளார். மேலும், மாணவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வந்ததுடன், பள்ளியிலும் அடிப்படை வசதிகளை மேற்கொண்டிருக்கிறார். இவரிடம் கற்ற மாணவர்கள் பலர் கல்வியில் சிறந்து விளங்கியதால், ஆசிரியர் சின்னக்கண்ணு பணியிட மாறுதலில் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவரிடமும் முறையிட்டனர்.
அவரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது எனக்கூறி மாணவ-மாணவிகளும், அவர்களது பெற்றோரும், அப்பகுதி இளைஞர்களும் நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டு பாசப்போராட்டம் நடத்தினர். ஆசிரியர் சின்னக்கண்ணுவை மாற்றக்கூடாது என்றும், அவரது பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கண்ணீர்மல்க கோரிக்கை வைத்தனர்.
நெகிழ்ச்சி
போராட்டத்தை தொடர்ந்து ஆசிரியர் சின்னக்கண்ணுவிடம் மாணவர்கள் வற்புறுத்தினர். இதனால் அவர் பணியிட மாறுதலில் செல்வதை பரிசீலித்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் பணி ஓய்வு பெற இன்னும் 2 ஆண்டுகளே உள்ள நிலையில், தொடர்ந்து இந்த பள்ளியிலே பணியாற்ற அப்பகுதியினரும் விரும்புகின்றனர்.
ஆசிரியர் பணியை அர்ப்பணிப்போடு மட்டுமில்லாமல், மாணவர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டு செயல்பட்டதால் மாணவர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் அவர்களது பெற்றோர் மற்றும் அவரிடம் படித்த முன்னாள் மாணவர்களின் மனதில் இடம்பிடித்தார். இதனால் அவரை வேறு பள்ளிக்கு மாற்றக்கூடாது என மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.