புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தற்காலிக பஸ் நிலையம்.
புதுக்கோட்டை,ஜூலை.29-
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கட்டிடங்கள் சேதமடைந்ததால் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தற்காலிக பஸ் நிலையம் அமைய உள்ளது.
புதிய பஸ் நிலையம்
புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த பஸ் நிலைய கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து டவுன் மற்றும் புறநகர பஸ்கள் ஏராளமாக இயக்கப்படுகின்றன.
பஸ் நிலைய வளாகத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும் தினமும் பயணிகள் ஏராளமானோர் வருகை தருவது உண்டு. இந்த நிலையில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கட்டிடங்கள் பல இடங்களில் சேதமடைந்தன. கட்டிடத்தின் மேற்கூரையில் கான்கிரீட் சிமெண்டு பூச்சுகள் ஆங்காங்கே பெயர்ந்து பயணிகள் மற்றும் கடைக்காரர்கள் மீதும் விழுந்தது.
பணிமனை
புதிய பஸ் நிலைய கட்டிடத்தின் ஸ்திரதன்மையை வல்லுனர் குழுவினர் ஆய்வு செய்ததில், கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட அறிவுறுத்தினர். இதையடுத்து புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கியது. கடந்த ஆண்டிலே கட்டுமான பணிகள் தொடங்க வேண்டியது. ஆனால் பருவ மழை மற்றும் பண்டிகை நாட்களால் கட்டுமான பணி தாமதமாகியது. பஸ் நிலையத்தில் கட்டிடங்கள் விரிசல் அதிகரித்து வருவதால், கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
முதல்கட்டமாக தற்காலிக பஸ் நிலையம் அமைப்பதற்காக புதிய பஸ் நிலையத்தையொட்டியுள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை இடத்தை தேர்வு செய்துள்ளனர். அந்த இடத்தை ஒதுக்கி தருமாறு அரசு போக்குவரத்து கழகத்திற்கு நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், ஆணையர் ஷியமளா மற்றும் நிர்வாகம் சார்பில் கடிதம் கொடுத்துள்ளனர். இதில் இடம் ஒதுக்கப்படுவது பெருமளவு உறுதியாகி விட்டது.
பராமரிப்பு பணி
இதையடுத்து பணிமனையில் இருந்து தற்போது இயக்கப்படும் பஸ்களை பக்கத்து பணிமனைகளுக்கு அனுப்பி இயக்க அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். பணிமனை வளாகத்தில் மழை காலத்தில் தண்ணீர் தேங்கும் என்பதால், தண்ணீர் தேங்காத அளவிற்கு தரைத்தளத்தை உயர்த்துதல் மற்றும் பராமரிப்பு பணிகளை நகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொள்ள போக்குவரத்து துறையினர் கேட்டுள்ளனர்.
தற்காலிக பஸ் நிலையம், தற்போதுள்ள பஸ் நிலையத்தையொட்டி அமைவதால் பஸ்களை இயக்கவும், பயணிகள் வந்து செல்லவும் வசதியாக இருக்கும். தற்காலிக பஸ் நிலையத்தை தொடர்ந்து புதிய கட்டிடம் கட்டும் பணி விரைவில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.