புதிய மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்; விவசாய சங்க பொதுக்குழுவில் தீர்மானம்.
புதுக்கோட்டை, மார்ச்.22-
புதுக்கோட்டை அறிவியல் மைய கட்டிடத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க புதுக்கோட்டை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கினார். மாநில செய்தி தொடர்பாளர் அரவிந்தசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மத்தியில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போடவேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வட்டி இல்லா பயிர்க்கடன் வழங்க வேண்டும்.
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்ட நிர்ணயம் செய்ய வேண்டும். புதிய மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெறவேண்டும். புதுக்கோட்டையில் மன்னர் காலத்தில் வெட்டப்பட்ட ஏரிகளை நவீனப்படுத்தலுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் எந்த ஒரு தேசிய கட்சி வாக்குறுதியாக வெளியிடுகிறதோ அந்த கட்சிக்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கம் ஆதரவு அளிக்கும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக அறந்தாங்கி ஒன்றிய அமைப்பாளர் புஷ்பராஜ் வரவேற்றார். முடிவில் திருமயம் ஒன்றிய அமைப்பாளர் முருகையன் நன்றி கூறினார்.