புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு அச்சடித்து வந்தது; விரைவில் வினியோகம்.
புதுக்கோட்டை, செப்.5-
புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு அச்சடித்து வந்தது. விரைவில் வினியோகிக்கப்பட உள்ளது.
ரேஷன் கடை
அரசின் சலுகைகள் உள்பட ஆவணங்களில் முக்கியமான ஒன்றாக ரேஷன் கார்டு உள்ளது. ஏழை, எளிய மக்கள் முதல் அனைத்து தரப்பினருக்கும் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது. அரிசி, பாமாயில், சர்க்கரை, கோதுமை, பருப்புகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இதுதவிர பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசின் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பும் கடந்த சில ஆண்டுகளாக வினியோகிக்கப்பட்டு வருகிறது. எனவே ரேஷன் கார்டு என்பது அத்தியாவசியமாக உள்ளது. ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் திருமணத்திற்கு பின், அவர்களது பெயர் ரேஷன் கார்டில் நீக்கலுக்கு பின், புதிதாக விண்ணப்பித்து கார்டு பெறுவது வழக்கம். இதேபோல ரேஷன் கார்டு இல்லாதவர்களும் விண்ணப்பித்து வருகின்றனர்.
புதிய கார்டுகள்
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 1½ ஆண்டுகளாக புதிய ரேஷன் கார்டு வினியோகிக்கப்படவில்லை. இதனால் ஏற்கனவே ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு விண்ணப்பம் அப்படியே நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
இதற்காக புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு ஸ்மார்ட் கார்டு வடிவில் அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் புதிய ரேஷன் கார்டுகள் அச்சடித்து வந்துள்ளது. இவை விரைவில் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளதாக வட்ட வழங்கல் துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.
பொதுமக்கள் தவிப்பு
இதற்கிடையில் அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் வட்ட வழங்கல் பிரிவில் புதிய ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும் என பொதுமக்கள் அலைந்து செல்கின்றனர். ஆனால் புதிய ரேஷன் கார்டு வினியோகம் தொடர்பாக முறையான அறிவிப்புகள், எதுவும் இல்லாததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.