பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா நோட்டுகள், கணித உபகரண பெட்டி வந்தன.
புதுக்கோட்டை, மே.27-
புதுக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா நோட்டுகள், கணித உபகரண பெட்டி வந்தன.
விலையில்லா பொருட்கள்
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், கணித உபகரணங்கள், சீருடைகள், காலணிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. வருகிற கல்வியாண்டிற்காக பள்ளிகள் வருகிற 6-ந் தேதி திறக்கப்பட உள்ளது.
பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவ-மாணவிகளுக்கான விலையில்லா பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தன. இதேபோல விலையில்லா ஷூ, சாக்ஸ் வந்திறங்கின.
கணித உபகரண பெட்டி
இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 6 மற்றும் 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கணித உபகரண பெட்டிகள் நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில் உள்ள குடோனிற்கு வந்திறங்கின.
இதேபோல 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கான விலையில்லா நோட்டுகளும் மினி லாரியில் வந்தன. அவை குடோனில் இறக்கி வைக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக அந்தந்த பள்ளிகளுக்கு இவை அனுப்பி வைக்கப்பட உள்ளன. பள்ளி திறக்கப்படும் நாளில் பாடப்புத்தகங்கள், நோட்டுகள் உள்பட அனைத்து பொருட்களும் மாணவர்கள் கையில் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.