நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் தயார் நிலையில் வைப்பு.
புதுக்கோட்டை, ஏப்.13-
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடிகள்
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கந்தர்வகோட்டை (தனி) சட்டமன்ற தொகுதியில் 239 வாக்குச்சாவடிகளும், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குச்சாவடிகளும், கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விராலிமலையில் 255 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.இதேபோல் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமயம் சட்டமன்ற தொகுதியில் 274 வாக்குச்சாவடிகளும், ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் 242 வாக்குச்சாவடிகளும், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
எழுது பொருட்கள்
அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின், பெயர் சின்னம் அடங்கிய சீட்டு பொருத்தப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியல், எழுது பொருட்கள், மை, சாக்குப்பை, சீல் வைப்பதற்கான அரக்கு உள்பட 30 வகையான பொருட்களை தொகுதிக்குட்பட்ட அந்தந்த தாலுகா அலுவலகங்களில் சேகரித்து வைக்கின்றனர். வாக்குப்பதிவுக்கு முன்பாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும் போது அந்த பொருட்களும் அனுப்பி வைக்கப்படும்.