நல வாரியத்தில் கட்டுமான தொழிலாளர்கள் சேர நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது, நலவாரிய தலைவர் தகவல்.
புதுக்கோட்டை, ஆக.11-
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார் தலைமை தாங்கினார். கலெக்டர் அருணா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் 72 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பொன்குமார் வழங்கினார். அப்போது அவர் தெரிவிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் இதுவரை 1,02,025 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
மாவட்டத்தில் 2023-2024 -ம் நிதியாண்டில் 23,486 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 89 லட்சத்து 63 ஆயிரத்து 664 மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களில் 10,484 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 61 லட்சத்து 80 ஆயிரத்து 604 மதிப்பிலான உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.
அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
“கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் சேர நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளன. நல வாரியத்தில் 24 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். புதிய திட்டங்கள் நல வாரியத்தில் செயல்படுத்தப்படுகின்றன. வெளிமாநில தொழிலாளர்கள் 6 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த குழு அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது” என்றார். கூட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் தங்கராசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.