தொடரும் வெறிநாய்களின் அட்டூழியம் கட்டுமாவடியில் ஒரே நாளில் 13 ஆடுகள் பலி.
கட்டுமாவடி ஜூலை.18-
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் ஒரே நாளில் வெறிநாய்கள் கடித்து 13 ஆடுகள் பலியாகியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெறிநாய்களின் கொடூர தாக்குதல்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் கால்நடைகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக கோபாலப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தெரு நாய்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது.
இதனால் பொதுமக்கள் குழந்தைகள் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். சில தினங்களுக்கு முன் ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தில் பள்ளி முடித்து வந்த குழந்தைகளை தெரு நாய் கடித்து மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதே போன்று கட்டுமாவடியிலும் ஆறு மாத குழந்தையை வெறிநாய் கடித்து உரிய நேரத்தில் குழந்தையை காப்பாற்றப்பட்டு இருக்கிறது. கடந்த வாரம் வெறிநாய் கடித்து ஒரு ஆடு பலியாகி இருந்தது.
அதேபோன்று கட்டுமாவடி அருகே மேலகுடியிருப்பைச் சேர்ந்த வேலு என்பவரின் 13 ஆடுகளை மூன்று நாட்களாக காணாமல் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) ஓச்சக்குடி கிராமம் அருகே 13 ஆடுகளும் வெறி நாய்களால் கடிக்கப்பட்டு உடல்கள் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலை தொடருமானால் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை ஏற்படும்.
எனவே ஊராட்சி நிர்வாகங்களும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து வெறிநாய்களை அப்புறப்படுத்தி பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.