தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் வருகை: வாகனங்களில் கட்டப்பட்டுள்ள அரசியல் கட்சி கொடிகளை அகற்ற வேண்டும், பறக்கும்படை, கண்காணிப்பு குழுவுக்கு அதிகாரிகள் உத்தரவு.
புதுக்கோட்டை, மார்ச்.24-
வாகனங்களில் கட்டப்பட்டுள்ள அரசியல் கட்சி கொடிகளை அகற்ற வேண்டும் என பறக்கும்படை, கண்காணிப்பு குழுவுக்கு தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
தேர்தல் கட்டுப்பாட்டு அறை
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தேர்தலின் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி ஏற்கனவே அரசியல் கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும் தேர்தல் விதிமீறல்களை தடுக்கவும், கண்காணிக்கவும் பறக்கும்படை, கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்திலும் இக்குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் விதி மீறல் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையின், இலவச தொலைப்பேசி எண்கள், 1800 4252 735, 04322-229860, 04322- 229870, 04322 -229880, 04322- 229890 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர்.
வாகனங்களில் கட்சி கொடி
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் வந்தப்படி உள்ளன. இதில் அரசியல் கட்சியினரின் கொடிகள் கார்கள், வாகனங்களில் கட்டப்பட்டுள்ளதை அகற்றப்படாமல் சுற்றி வருவதாக புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து கார்களில் அரசியல் கட்சியினரின் கொடி கட்டியிருந்தால் அதனை அகற்றும்படி மாவட்டத்தில் பறக்கும்படை, கண்காணிப்பு குழுவினருக்கு தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஏற்கனவே விதிமுறையில் இது இருப்பதாகவும், அதனை கட்சியினர் கடைப்பிடிக்க தெரிவித்துள்ளனர். தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை நேர நிலவரப்படி தொலைப்பேசி எண்களுக்கு 7 புகார்கள் வரை வந்திருந்ததாக தேர்தல் அலுவலக வட்டாரத்தில் தெரிவித்தனர்.