தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த ஆயிப்பட்டி கிராம மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை.
ஆலங்குடி, மார்ச்.24-
ஆலங்குடி தாலுகாவில் ஆயிப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் ஆயிப்பட்டியில் இருந்து மேலக்கோட்டை செல்லும் இணைப்பு சாலை இணைக்கப்படாமல் உள்ளது. இந்த சாலையை இணைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த 60 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்தனர். மேலும் இதுகுறித்து புதுக்கோட்டை-ஆலங்குடி சாலையில் ஆயிப்பட்டி கிராமத்திற்கு செல்லும் வளைவில் பேனர் வைத்தனர்.
இதனைதொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, குப்பகுடி ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ, ஒன்றிய ஆணையர்கள் உள்ளிட்டோர் இணைப்பு சாலையை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதற்கு திருவரங்குளம் ஒன்றிய (வட்டார கிராம ஊராட்சிகள்) கோகுலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது தனிநபர் பட்டா நிலத்தில் சாலை வருவதால் தேர்தல் முடிந்த பிறகு ஆலங்குடி தாசில்தாரிடம் பேசி முடிவு செய்யலாம் என கூறப்பட்டது. இதில் சமாதானம் அடைந்த கிராம மக்கள் தாங்கள் வைத்த பேனரை அகற்றிக்கொண்டனர்.