தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரிப்பு: கட்டுப்படுத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவு.
மதுரை, ஆக.9-
தமிழகம் முழுவதும் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து இருப்பதாகவும், அவற்றை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தெருநாய்கள் தொல்லை
அண்மை காலங்களாக தெரு நாய்களின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதை நாம் பார்க்க முடிகின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தில் பள்ளி விட்டு சென்ற சிறுவர்களை தெரு நாய் ஒன்று கடித்ததில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
இதேபோன்று கட்டுமாவடியிலும் நாய்கள் கடித்து 15க்கும் மேற்பட்ட ஆடுகள் செத்துப் போயின. இதற்கிடையில் மீமிசல், கோபாலப்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளிலும் தெருநாய்களின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அது மட்டுமல்லாது சாலையில் செல்லும்போது குறுக்கே சென்று வாகன விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு தெரு நாய்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வழக்கு
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் தெருநாய் கடிக்கு ஆளாகி, பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். தெருநாய்களால் ரேபிஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாகி, பலர் இறக்கின்றனர். 5 முதல் 14 வயது வரை உள்ளவர்கள்தான் இந்த நோய்க்கு அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். நாள்தோறும் தெருநாய் தொல்லை குறித்து செய்திகளும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. சாதாரண மக்கள்தான் தெருநாய்களின் தொல்லைக்கு ஆளாகின்றனர்.
எச்சரிக்கை
ரேபிஸ் தாக்குதல் என்பது ஆசியாவில் பெரும் பிரச்சினையாக இருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரித்து உள்ளது. இதுசம்பந்தமாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலன் இல்லை.
எனவே தமிழகம் முழுவதும் தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுற்றித்திரியும் நாய்களை அகற்ற வேண்டும். நீண்ட கால அடிப்படையில் நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு விதிகளை முறையாக அமல்படுத்த வேண்டும்.
மாநிலம் முழுவதும் நாய்களுக்கான கருத்தடை மற்றும் தடுப்பூசி சிகிச்சையை முறையாக மேற்கொள்ள வேண்டும். ரேபிஸ் தடுப்பூசிகளை அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் போதுமான அளவில் இருப்பு வைக்கும்படி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
பதில் அளிக்க உத்தரவு
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “சென்னை, மதுரை ஐகோர்ட்டு வளாகத்திலும் நாய்கள் சுற்றித்திரிகின்றன. தமிழகம் முழுவதும் இதே நிலைதான் உள்ளது. ஆனால் விலங்குகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்,” என கருத்து தெரிவித்தனர்.
மேலும் நீதிபதிகள் கூறுகையில், “தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதாக கூறி, நாய்களின் காதுகளில் ஓட்டையை மட்டும் போட்டுவிடுகின்றனர். ஆனால் அந்த நாய்களுக்கு கருத்தடை செய்ததாக கணக்கு காட்டுகின்றனர். தெருநாய்களால் ஏற்படும் தொல்லைகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது” எனவும் அதிருப்தி தெரிவித்தனர்.
விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்தும், தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்தும் மத்திய அரசின் சுகாதாரத்துறை, விலங்குகள் பாதுகாப்பு நலத்துறை செயலாளர்கள் மற்றும் தமிழக அரசு பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.