திருமயத்தில் பழமை மாறாமல் கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டிடம்; அரண்மனை போல் காட்சியளிக்கிறது.
திருமயம், மே.6-
திருமயத்தில் பழமை மாறாமல் கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டிடம் அரண்மனை போல் காட்சியளிக்கிறது.
அரசு மேல்நிலைப்பள்ளி
திருமயத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இது கடந்த காலங்களில் இருபாலர் பள்ளியாக இயங்கி வந்த நிலையில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்கள், பெண்கள் பள்ளியாக பிரிக்கப்பட்டு பழைய கட்டிடத்தில் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது பயின்று வருகின்றனர். கடந்த 1924-ம் ஆண்டு கடியாபட்டி ராமச்சந்திரபுரம் முத்தையா செட்டியாரால் கட்டப்பட்ட இந்த பள்ளி அப்போதைய புதுக்கோட்டை சமஸ்தான ராஜாவாக இருந்த ராஜகுமார விஜய ரகுநாத துரையால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு காங்கிரசின் மூத்த தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான தீரர் சத்தியமூர்த்தி படித்துள்ளார். மேலும், திருமயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அரசு பள்ளியில் படித்து தற்போது பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள்.
சீரமைக்க கோரிக்கை
நூற்றாண்டு கண்ட இந்த பள்ளி கட்டிடம் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் இடிந்து விடும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனை அறிந்த இப்பகுதி மக்கள் இந்த பள்ளியை சீரமைக்க வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதேபோல் கடந்த ஆண்டு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் திருமயம் அரசுப்பள்ளியை புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பழமை மாறாமல் புதுப்பிக்க உத்தரவிட்டார். மேலும் இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு பள்ளி கட்டிடம் புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.
அரண்மனை போல் காட்சியளிக்கிறது
பள்ளி கட்டிடம் புதுப்பிக்கும் பணியில் செங்கல், சிமெண்டு, கம்பிகள், ஜல்லி கற்கள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை. மாறாக பழைய காலத்தில் கட்டிடக்கலைக்கு பயன்படுத்தப்பட்ட கண்டிகல், கடுக்காய், பனை வெல்லம், சுண்ணாம்புக்கல் உள்ளிட்டவைகள் பயன்படுத்தப்பட்டன. அதேசமயம் கட்டிடம் புதுப்பிக்கும் பணிக்காக தேவைப்படும் மூலப்பொருட்கள், பணியாட்கள் கிடைப்பதில் பெரும் சவால் நிறைந்து இருந்தது. இருந்த போதிலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பழைய கட்டிடக்கலைகளில் ஈடுபடும் பணியாட்கள் மற்றும் மூலப்பொருட்கள் கொண்டு வரப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
தற்போது பள்ளியின் உட்புறம் மற்றும் வெளிப்புற தோற்றத்தை பார்க்கும் போது அரண்மனை போல் காட்சியளிப்பதால் பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பள்ளியை பழைமை மாறாமல் சீரமைத்த தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இந்த ஆண்டு முதல் இந்த பள்ளி மீண்டும் செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.