திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.16 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்; ரூ.51.39 லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது
செம்பட்டு, அக்டோபர் 30:
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.16 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்; ரூ.51.39 லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது
திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு தங்கம் கடத்தி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
இதை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்; இருப்பினும், தங்கம் கடத்தல் சம்பவங்கள் குறைவடையவில்லை.
இந்த நிலையில், நேற்று சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூரிலிருந்து வந்த விமானங்களில் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 4 பயணிகளின் செயல்பாடுகளில் சந்தேகம் ஏற்பட்டது.
1 கிலோ 488 கிராம் தங்கம்
அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் அவர்களை தனியாக அழைத்து சென்று சோதனை நடத்தினர். சோதனையில் அவர்கள் 8 சங்கிலி வடிவிலான தங்கத்தையும், 2 வளையல் வடிவிலான தங்கத்தையும் கடத்தி வந்தது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து, அதிகாரிகள் அவர்களிடம் இருந்து ரூ.1.16 கோடி மதிப்புள்ள 1 கிலோ 488 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இவற்றின் மூலம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெளிநாட்டு பணம்
இதேபோல், திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று சிங்கப்பூர் செல்ல காத்திருந்த பயணிகளின் உடமைகளை மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, ஒரு பயணியின் செயல்பாட்டில் சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
மேலும், அவரது உடமைகளை சோதித்ததில் வெளிநாட்டு பணமான அமெரிக்க டாலர், சிங்கப்பூர் டாலர், அரேபிய ரியால் மற்றும் இந்திய ரூபாய்கள் என ரூ.51.39 லட்சம் மதிப்பிலான பணம் இருந்தது. அதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.