திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பஸ்-லாரி மோதல்; பெண் பலி 10 பேர் படுகாயம்
ஆவூர், நவ.27-
திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பஸ்-லாரி மோதல்; பெண் பலி 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
தனியார் பஸ்
திருச்சியில் இருந்து தனியார் பஸ் ஒன்று நேற்று மதியம் பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டையை நோக்கி சென்று கொண்டிருந்தது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சந்தமனை பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் அந்த பஸ்சை ஓட்டி சென்றார்.
திருச்சி -புதுக்கோட்டை சாலையில் தொண்டைமான் நல்லூர் சுங்கச்சாவடியின் அருகே சென்றபோது முன்னாள் சென்ற ஒரு அரசு பஸ்சை முந்தி செல்ல முயன்றார்.
பெண் பலி
அப்போது எதிரே விராலிமலை ஒன்றியம் பாலாண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் (42) என்பவர் ஓட்டிச் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக பஸ் அதிவேகமாக மோதி விபத்திற்குள்ளானது. விபத்தை தொடர்ந்து பஸ்சில் பயணம் செய்த பயணிகள் காயம் அடைந்து அலறினர்.
இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் பஸ்சில் படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு உள்ளே இருந்து வெளியே கொண்டு வந்தனர். இதில் புதுக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த சேட் என்பவரது மனைவி ஆமீனாபீவி (55) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
10 பேர் படுகாயம்
மேலும் சிவகங்கை மாவட்டம் பள்ளிநத்தம் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய ஏஞ்சல் (47), கீரனூர் அருகே ஒடுகம்பட்டி கிராமத்தை சேர்ந்த முகமது ஆசிக் (28), சையது அப்துல்லா (19), விராலிமலை தாலுகா வெள்ளைய கவுண்டம்பட்டி பெருமாள் (28), அறந்தாங்கி அச்சாணிவயல் கார்த்திக் (32), புதுக்கோட்டை கட்டியாவயல் ராஜலட்சுமி (52,) விராலிமலை ஒன்றியம் விளாப்பட்டி இளஞ்சியம் (35), கீரனூர் மணிகண்டன் (28), திருச்சி காஜாமலை கோபிகா (19), திருச்சி காட்டூர் கலா (52) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே விபத்தில் இறந்த ஆமீனாபீவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்