திருச்சியில் இருந்து சார்ஜா நோக்கி சென்ற விமான சக்கரம் பழுது!
திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சார்ஜா நோக்கி புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் முன் சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானத்தை தரையிறக்க முடியாமல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கீரனூர் பகுதியிலேயே விமானம் வானில் வட்டமிட்டபடி சுற்றுகிறது.
இன்று 11.10.2024 வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணி அளவில் திருச்சியில் இருந்து 144 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சார்ஜா நோக்கி புறப்பட்டது.
ஓடுபாதையில் இருந்து மேல எழும்பி வானில் பறக்க ஆரம்பித்தவுடன் விமானத்தின் சக்கரங்கள் தானாக உள்ளே இழுக்கப்பட்டு விடும். ஆனால் சார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அதன் சக்கரங்கள் உள்ளே இழுக்கப்படாமல் அப்படியே நின்று விட்டதாக தகவல் கூறப்படுகிறது.
எனவே விமானத்தை திருச்சியில் தரை இறக்குவதற்கான முயற்சியில் விமானிகள் ஈடுபட்டனர்.
ஆனால் விமானத்தில் எரிபொருள் முழுமையாக இருப்பதால் தரை இறக்கும்பொழுது தீ விபத்து ஏற்படுகின்ற அபாய நிலை உள்ளது.
எனவே விமானத்தை வானில் வட்டமிட்டபடியே விமானத்தில் எரிபொருளை குறைத்து பிறகு விமானத்தை காற்றுக்கு எதிர் திசையில் தரை இறக்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விமானம் வானில் வட்டமிட்டபடியே சுற்றிக் கொண்டிருக்கிறது.
திருச்சியில் உள்ள ஏராளமான ஆம்புலன்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் உள்ளன.