தமிழ்நாடு வக்ஃப் வாரிய புதிய தலைவராக நவாஸ்கனி எம்.பி தேர்வு.
தமிழ்நாடு வக்ஃப் வாரிய புதிய தலைவராக நவாஸ்கனி எம்.பி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திமுக கூட்டணி கட்சிகளில் ஒன்றான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த அப்துல் ரகுமான் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் வக்பு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் வக்ஃப் வாரிய தலைவர் பதவியில் இருந்து அப்துல் ரகுமான் ராஜினாமா செய்து கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினார்.
அவரது ராஜினாமா கடந்த செப்.13 ம் தேதி ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் கூட்டத்தில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநில துணை தலைவருமான நவாஸ் கனி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-
தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.
தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைமை அலுவலகத்தில் (19-09-2024) காலை 11 மணியளவில் நடைபெற்ற வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.
மிக முக்கியமான காலகட்டத்தில் இந்த பொறுப்பை நம்பிக்கையோடு வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் நல்லாட்சி நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி மஸ்தான் அவர்களுக்கும், நம்பிக்கையோடு என்னை பரிந்துரை செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நிகழ்வில் முதன்மை செயல் அலுவலர் திரு தாரேஸ் அகமது இ.ஆ.ப., மற்றும் மாண்புமிகு வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் பங்கேற்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.