தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்.6 வரை நீட்டிப்பு; 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளி கல்வித்துறை.
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வரை வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு நடந்து வரும் நிலையில் ஏற்கனவே அக்டோபர் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது,
காலாண்டு விடுமுறை நாட்கள் அதிகரிக்கப்படும் என்று மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்து வந்த நிலையில் தற்பொழுது காலாண்டு விடுமுறையை அக்டோபர் 6-ம் தேதி வரை நீட்டித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
நடப்பு ஆண்டுக்கான அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வரை வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை ஆண்டின் தொடக்கத்திலேயே வெளியிட்டது.
அதில், 220 வேலை நாட்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. வழக்கமாக 210 நாட்கள் வரை மட்டுமே வேலை நாட்கள் இருக்கும் நிலையில் இந்த ஆண்டு அதனை 220 ஆக மாற்றியதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
எதிர்ப்பைத் தொடர்ந்து பள்ளி வேலை நாட்களை 210 ஆக குறைத்து, திருத்தப்பட்ட நாட்காட்டியை பள்ளிக் கல்வித் துறை சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் கல்வியாண்டு நாட்காட்டியில் தெரிவித்தபடி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கான காலாண்டு தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான தேர்வும் நடந்துவருகிறது.
பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்புகளுக்கு செப்.19-ம் தேதி தேர்வு தொடங்கிய நிலையில், 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு செப்.20-ம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கியது.
வருகிற 27-ந் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) காலாண்டு தேர்வை முடிக்கும் வகையில், அட்டவணை தயாரிக்கப்பட்டு தேர்வு நடைபெறுகிறது.
தேர்வு முடிந்ததும், வருகிற 28-ந் தேதி (சனிக்கிழமை) முதல் 2-ந் தேதி (புதன்கிழமை) வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட இருந்தது. காலாண்டு விடுமுறைக்குப் பின்னர், வருகிற 3-ந்தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவிருப்பதாக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு செய்து இருந்தது.
இந்நிலையில் காலாண்டு விடுமுறையை அக்டோபர் 6-ம் தேதி வரை நீட்டித்து 7-ம் தேதி திங்கள் கிழமை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.