தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்தால் தடுப்புச்சுவர் சேதம்.
ராமேசுவரம், மே.27-
பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 2-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கிறது. கடல் சீற்றத்தால் தனுஷ்கோடி பகுதியில் தடுப்புச்சுவர் சேதம் அடைந்தது.
2-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு
வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. புயல் சின்னம் இன்று கரையை கடக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டு 2-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. அதுபோல் புயல் சின்னம் எதிரொலியாக மறுஅறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 4-வது நாளாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு மற்றும் பைபர் படகுகளும் கரையோரத்தில் உள்ள பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தடுப்புச்சுவர் சேதம்
ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் தொடர்ந்து கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகின்றது. அரிச்சல் முனை அருகே சாலை ஓரம் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த தடுப்புச்சுவர்களின் கற்கள் கடல் சீற்றத்தால் அரிப்பு ஏற்பட்டு பெயர்ந்து சேதமடைந்துள்ளன. தனுஷ்கோடி பகுதியில் தொடர்ந்து கடல் சீற்றமாக காணப்பட்டு வருவதால் அங்கு கடலோர போலீசாரும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதை தடுக்கும் வகையில் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.