சுகாதாரமற்ற முறையில் இயங்கிய 5 ஜூஸ் கடைகள் மூடல்ரூ.8 ஆயிரம் அபராதம்.
புதுக்கோட்டை, ஜூன்.15-
புதுக்கோட்டையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய 5 ஜூஸ் கடைகள் மூடப்பட்டன. மேலும் கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஜூஸ் கடைகள்
புதுக்கோட்டையில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பழச்சாறு வகைகளை அருந்தி தங்களுடைய தாகத்தை போக்கி கொள்கின்றனர். அதன் காரணமாக புதுக்கோட்டை நகரில் நடமாடும் ஜூஸ் கடைகள் தற்போது அதிகளவில் இயங்கி வருகின்றன.
இந்தநிலையில் இங்குள்ள கடைகளில் சுகாதாரமற்ற முறையில் ஜூஸ் தயாரிக்கப்படுவதாகவும், ஈக்கள் விழுந்த கரும்புச்சாறு வடிக்கட்டி பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தன.
அபராதம் விதிப்பு
இதையடுத்து, புதுக்கோட்டை உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பிரவீன் குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் புதுக்கோட்டை நகராட்சி நகர் நல அலுவலர் தலைமையிலான நகராட்சி அதிகாரிகளும் புதுக்கோட்டை நகரில் உள்ள நடமாடும் ஜூஸ் கடைகளில் நேற்று அதிரடியாக சோதனை செய்தனர். அதில் சுகாதாரமற்ற முறையில் ஜூஸ் தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் உரிய உரிமம் இல்லாமல் கடை இயங்கியதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கடை ஊழியர்களை எச்சரித்த உணவு பாதுகாப்பு துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் 5 கடைகளை மூட உத்தரவிட்டனர். தொடர்ந்து கடைகள் மூடப்பட்டன. மேலும் அங்கு சுகாதாரமற்ற முறையில் இருந்த ஐஸ் கட்டிகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்தனர்.