சமூக வலைத்தளங்களில் பண்டிகை கால சலுகைகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்; சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு.
புதுக்கோட்டை, அக்.11-
சமூக வலைத்தளங்களில் பண்டிகை கால சலுகைகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆன்லைன் மோசடி
இன்றைய காலக்கட்டத்தில் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பொருட்களை வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மோசடி நபர்கள் இதனை குறித்து சமூக வலைத்தளங்களில் தங்களது கைவண்ணத்தை அரங்கேற்றி, அதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து தகவல்களை திருடி, பணம் மோசடி செய்யும் சம்பவம் தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு பொருட்களை பண்டிகை கால சலுகை விலையில் விற்பனை செய்யப்படுவதாக கூறி சமூகவலைத்தளத்தில் அதனை பரப்பிவிடுகின்றனர்.
அதனை பொதுமக்கள் நம்பி தொடர்பு கொண்டு பொருட்களை வாங்க முயற்சிக்கும் போது குறிப்பிட்ட பணத்தை ஆன்லைனில் பெற்றுக்கொண்டு மோசடி செய்து விடுகின்றனர். அவர்களுக்கு அந்த பொருளும் கிடைக்காமல் போவதோடு, பணமும் பறிபோகிறது.
பண்டிகை கால அறிவிப்புகள்
இந்த நிலையில் தற்போது ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகை, தீபாவளி பண்டிகையையொட்டி இதுபோன்று ஏதேனும் அறிவிப்புகளை நம்பி பொதுமக்கள் ஏமாறமால் இருக்க புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசார் வழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக இளம் வயதினர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைபர் கிரைம் போலீசார் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற தொலைபேசி எண் மற்றும் https://cybercrime.gov.in/ என்ற இணையதள முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கின்றனர்.
ஸ்மாா்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்த நிலையில் இதுபோன்ற மோசடியில் சிக்கிக்கொள்ளாமல் பொதுமக்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.