கோபாலப்பட்டினத்தில் குப்பைகளை சாலையின் நடுவே அள்ளி வீசிய மர்ம நபர்கள்.
கோபாலப்பட்டினம்,ஏப்ரல்.02-
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டினம் கிராமத்தில் 3000-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு ஊராட்சிமன்ற நிர்வாகம் சார்பாக வீட்டுக்கு வீடு குப்பைகள் சேகரிக்கப்பட்டு ஊருக்கு ஒதுக்கு புறமாக கொட்டப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது குப்பைகளை சேகரிக்கும் பணியினை சில சிக்கல்களால் ஊராட்சி நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது.
இதனால் ஊர் மக்கள் குப்பைகளை கொட்டுவதற்கு வழியில்லாமல் சாலைகளின் ஓரம் ஆங்காங்கே குப்பைகளை கொட்டும் அவலம் ஏற்பட்டது. குறிப்பாக ஆலமரம் அருகே ஈத்கா மைதானம் ஓரத்திலும், போலீஸ் ஸ்டேஷன் சாலை நான்கு வழி சந்திப்பு அருகிலும், மில் சாலையில் பாப்புலர் மழலையர் பள்ளி அருகிலும் குப்பைகள் வெகுவாக கொட்டப்படுகின்றன.
இந்நிலையில் இன்று 02.04.24 செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் அடையாளம் தெரியாத சில நபர்கள் சாலையோரத்தில் தேங்கி கிடந்த குப்பைகளை சாலையின் நடுவே அள்ளி வீசி பரப்பிவிட்டனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கும், அவ்வழியே நடந்து செல்வோருக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டது. இது தொடர்பாக ஊர் நிர்வாகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது ஆனால் குப்பைகளை சாலையின் நடுவே அள்ளி வீசிய நபர்கள் பற்றிய தகவல் ஏதும் தெரியவில்லை.
இவ்வாறு குப்பைகளை சாலையில் அள்ளி வீசும் செயல்கள் அதிகமாக நடைபெறுகின்றன. குப்பைகளை சேகரித்து முறையாக ஊரின் ஒதுக்குப்புறமாக கொட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபாலப்பட்டினம் ஜமாத் நிர்வாகத்திற்கும், ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.