கோடை காலத்தில் வன உயிரினங்கள் பலியாகும் சம்பவம்: வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
கீரமங்கலம், மார்ச்.28-
கோடைகாலத்தில் தண்ணீர் தேடி வரும் வன உயிரினங்கள் வாகனங்களில் அடிபட்டு பலியாகும் சம்பவங்கள் நடந்து வருவதால் வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மான்கள் பலி
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. அதேபோல கீரமங்கலம் மற்றும் சேந்தன்குடி, குளமங்கலம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி உள்ளிட்ட பல கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே பலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மற்றும் தைலமரக்காடுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது.
இதனால் பலமரக்காடுகளில் இருந்த முயல், மான், பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. தற்போது தைலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மரக்காடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தக் காடுகளில் வன உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் இந்தக் காடுகளில் உள்ள மான் போன்ற உயிரினங்கள் தண்ணீர் தேடி வெளியிடங்களுக்கு செல்லும் போது நாய்களால் கடித்து குதறப்படுகிறது. அதே போல தண்ணீர் தேடி சாலையை கடக்க முயலும் போது வாகனம் மோதி பலியாகிறது. இதே போல மாவட்டம் முழுவதும் பல விபத்து சம்பவங்களில் மான்கள், மயில்கள் போன்ற உயிரினங்கள் பலியாகி வருகிறது.
தண்ணீர் தொட்டிஅமைக்க வேண்டும்
எனவே, கோடை காலம் தொடங்கிவிட்டதால் காடுகளில் சுற்றித்திரியும் பறவைகள், வன உயிரினங்களுக்கு இறையும் தண்ணீரும் கிடைக்காமல் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் வரும் மயில், மான் போன்றவற்றை நாய்கள் கடிப்பதும், விபத்துகளில் சிக்கி பலியாவதும் தொடர்ந்து கொண்டிருப்பதால் ஒவ்வொரு காட்டுப் பகுதியிலும் சில இடங்களில் கோடை காலம் முடியும் வரை தண்ணீர் தொட்டிகள் அமைத்து வன உயிரினங்களை பாதுகாக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தண்ணீர் கிடைக்காமல் தான் இப்படி வெளியில் வந்து விபத்துகளில் சிக்கி உயிரினங்கள் பலியாகிறது கோடை வெயிலில் தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைப்பது போல வன உயிரினங்களின் தாகம் தீர்க்கவும், உயிர் காக்கவும் வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்று கீரமங்கலம் பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.