கோடியக்கரை கடற்கரையில் சுற்றுலா தலத்தை மேம்படுத்த நடவடிக்கை; அதிகாரிகள் ஆய்வு.
புதுக்கோட்டை, ஜூன்.3-
கோடியக்கரை கடற்கரையில் சுற்றுலா தலத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
கோடியக்கரை
புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல்குடி அருகே கோடியக்கரையில் கடற்கரை பகுதி உள்ளது. இந்த கடற்கரை அருகே சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள் உள்ளிட்டவையும், கடற்கரை பகுதியை காணும் வகையில் காட்சி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. காட்சி கோபுரம் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் கோடியக்கரை கடற்கரை பகுதியில் இருந்து கடலை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருவது உண்டு.
சுற்றுலா தலம்
இந்த நிலையில் கோடியக்கரை கடற்கரையில் சுற்றுலா தலத்தை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதற்காக வனத்துறை மற்றும் சுற்றுலா துறை அதிகாரிகள் கோடியக்கரை கடற்கரையில் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “கடற்கரையில் பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள் வசதி அமைத்தல், சிறுவர்கள் உள்பட பெரியவர்கள் பொழுதை கழிக்கும் வகையில் பூங்காக்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல காட்சி கோபுரத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. கோடியக்கரைக்கு செல்லும் வழியில் சாலை வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த ஆய்வுக்கு பின் உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கோடியக்கரை கடற்பகுதியில் இருந்து கடலை ரசிக்க மிகவும் அழாக இருக்கும். சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தையும் இங்கிருந்து பார்க்க முடியும். மேலும் மாலை நேரப்பொழுதில் இப்பகுதி அழகாக இருக்கும்” என்றனர்.