குழந்தை தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனரா? ஆய்வு மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு.
புதுக்கோட்டை, ஜூன்.27-
தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிகின்றனரா? என ஆய்வு மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார்.
குழந்தைகள் பாதுகாப்பு
புதுக்கோட்டை மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி தெரிவித்ததாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து காலமுறை குழு கூட்டத்தினை நடத்திட புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி நகராட்சி ஆணையர் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் உரிமைகள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக குழந்தைகள் சார்ந்து பணிபுரியக் கூடிய காவல்துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை, ஆகிய துறைகளை சார்ந்த பணியாளர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி நடத்திட வேண்டும்.
குழந்தை தொழிலாளர்கள்
மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தொழிலாளராகப் பணிபுரிவது குறித்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அலுவலர் மூலம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பாக போலீசார் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ள 14 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மாவட்டத்தில் வளரிளம் பருவ குழந்தைகள் பாதிக்கப்பட்டு கர்ப்பமடைந்த நிலையில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளின் விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
ஒருங்கிணைத்து…
எனவே, குழந்தைகளின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு, தொடர்புடைய அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ரம்யாதேவி, மாவட்ட வட்ட சட்டப் பணிக்குழு செயலர் நீதிபதி ராஜேந்திர கண்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர், அன்னவாசல் ஒன்றியக் குழுத் தலைவர் ராமசாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.