காரைக்குடி அருகே 18-ம் நூற்றாண்டை சேர்ந்த கோட்டைச்சுவர் கண்டுபிடிப்பு.
சிவகங்கை, ஏப்.25-
காரைக்குடி அருகே 18-ம் நூற்றாண்டை சேர்ந்த கோட்டைச்சுவர் கண்டுபிடிக்கப்பட்டது.
கோட்டைச்சுவர்
காரைக்குடி அருகே உள்ளது அமராவதி புதூர். இந்த ஊரில் பழமையான கோட்டை ஒன்று உள்ளது. இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவர் கொடுத்த தகவலின்படி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்று துறை உதவி பயிற்றுனர் பாலசுப்பிரமணியன் அங்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அந்த கோட்டை 18-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது கண்டறியப்பட்டது.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-. இந்த கோட்டை மிகவும் பழமை வாய்ந்ததாகும். 5 ஏக்கருக்கு மேல் உள்ள இந்த கோட்டை ஊரின் மத்தியில் அமைந்துள்ளது. கோட்டையை சுற்றி 10 மீட்டர் அகலம் உள்ள அகழிகள் கட்டப்பட்டுள்ளது. பொதுவாக அகழிகள் இருந்தால் அந்த கோட்டை மிகப்பெரிய பழமை வாய்ந்த கோட்டையாகவும், மன்னருடைய காலகட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுவது வழக்கம்.
18-ம் நூற்றாண்டை சேர்ந்தது
அமராவதி புதூரில் உள்ள இந்த கோட்டை 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது. இதன் அருகில் சங்கரபதி கோட்டை ஒன்றும் உள்ளது. இந்த அமராவதி புதூர் கோட்டை பகுதியை அமராவதி என்ற மன்னன் குறு நில மன்னராக ஆட்சி செய்து வந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
மேலும் இது குதிரை லாயமாக கூட இருந்திருக்கலாம். இதன் சுற்றுச்சுவர் கிட்டத்தட்ட 6 அடி அகலத்தில் காணப்படுகிறது.
கோட்டையின் உயரம் அதிகபட்சம் 20 அடி. இது செம்பூரான் கற்களால் கட்டப்பட்டுள்ளது. சுண்ணாம்பு கடுக்காயை பயன்படுத்தி கட்டப்பட்ட ஒரு வலுவான கோட்டையாகவும் இன்றளவும் காணப்படுகிறது. கோட்டை சுற்றுச்சுவர்களும், கோட்டையின் பின்பக்கம் வளைவான கற்களும் கொண்ட பகுதியாகவும் உள்ளது.
மருது பாண்டியர்கள்
இந்த கோட்டை தானியக்கிடங்காகவோ, அல்லது ஆயுதங்களை பாதுகாப்பதற்காகவோ இருந்திருக்கலாம் என்று தெரியவருகிறது. இந்த கோட்டைக்கு போதுமான கல்வெட்டு ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. வேலுநாச்சியார் காலகட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக நடந்த போர்க்காலங்களில் இந்த கோட்டை பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். ஆங்கிலேயர்களுக்கு எதிராக மருது பாண்டியர்கள் போர் செய்தபோது இந்த கோட்டை சிதிலமடைந்திருக்கலாம் என தெரிய வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.