கறம்பக்குடி அருகே கத்தியை காட்டி மிரட்டி 2 பெண்களிடம் தாலி சங்கிலி பறிப்பு, கொள்ளையர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மறியல்.
கறம்பக்குடி, ஜூலை.8-
கறம்பக்குடி அருகே கத்தியை காட்டி மிரட்டி 2 பெண்களிடம் தாலி சங்கிலியை பறித்து சென்ற கொள்ளையர்களை கைது செய்யக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தாலி சங்கிலி பறிப்பு
கறம்பக்குடி அருகே மருதன்கோன் விடுதி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வருபவர் கருணாநிதி (வயது 50). இவர் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரிக்கண்ணு (42). இவர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் வீட்டின் உள்ளே சத்தம் கேட்பதை அறிந்து கருணாநிதியும், மாரிக்கண்ணுவும் கண் விழித்தனர்.அப்போது வீட்டினுள் இருந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென கத்தியை காட்டி மிரட்டி மாரிக்கண்ணு அணிந்திருந்த 6 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர். இதை தடுக்க முயன்ற கருணாநிதியை உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் கருணாநிதி காயமடைந்தார்.
தப்பி ஓட்டம்
இதையடுத்து அந்த கும்பல் அதே பகுதியில் உள்ள ஸ்ரீதர் என்பவரது வீட்டிற்குள் புகுந்தனர். ஸ்ரீதர் (42) வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் அவரது மனைவி ஷீலா (35) மற்றும் குடும்பத்தினர் வீட்டின் உள் அறையில் தூங்கி கொண்டிருந்தனர். கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைக்கும் சத்தம் கேட்டு ஷீலா கண்விழித்தார். அவர் சத்தம் போட முயன்ற போது கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி கதவை திறக்க வலியுறுத்தினர். அவர் கதவை திறக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து ஷீலாவை தாக்கி அவர் அணிந்திருந்த 4 பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடினர்.
ஷீலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
சாலை மறியல்
இந்தசம்பவம் குறித்து மாரிக்கண்ணு, ஷீலா ஆகியோர் அளித்த புகாரின் பேரில் கறம்பக்குடி போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே இப்பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாகவும், போலீசாரிடம் புகார் செய்தால் மனுவை பெற்றுக்கொண்டு வழக்குப்பதிவு செய்வதில்லை. குற்றவாளிகள் மீது நடவடிக்கை இருப்பதில்லை என குற்றம் சாட்டினர்.
மேலும் பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி தாலி சங்கிலியை பறித்து சென்ற கொள்ளையர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் உறவினர்கள் மருதன் கோன் விடுதி நால்ரோட்டில் கந்தர்வகோட்டை-பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 3 நாட்களில் கொள்ளையர்களை கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதனால் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.