கடன் தொல்லையால் விபரீத முடிவு; தொழில் அதிபர் குடும்பத்தினர் 5 பேர் தற்கொலை, காருக்குள் சடலமாக கிடந்தனர்.
புதுக்கோட்டை, செப்.26-
புதுக்கோட்டை அருகே கடன் தொல்லையால் தொழில் அதிபர் குடும்பத்தினர் 5 பேர் காருக்குள் தற்கொலை செய்து கொண்டனர். காருக்குள் சடலமாக கிடந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை ஓரம் நகர சிவமடம் என்ற பெயரில் ஒரு மடம் உள்ளது.
காருக்குள் பிணங்கள்
அந்த மடத்தில் அடைக்கலம் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவர் நேற்று காலை 7 மணி அளவில் வேலைக்கு வந்தார். அப்போது மடத்தின் முன்பு ஒரு கார் நின்று கொண்டிருந்ததை கண்டார்.
அந்த காரின் அருகே சென்றார். காரின் முன்பக்க இருக்கையில் பக்கவாட்டு கண்ணாடி சற்று இறங்கி இருந்தது. அதன் வழியே அவர் காருக்குள் எட்டிப்பார்த்தார். அப்போது காரில் இருந்தவர்கள் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக நமணசமுத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது காருக்குள் 3 பெண்கள், 2 ஆண்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது.
கடிதம் சிக்கியது
காருக்குள் 5 பேர் பிணமாக கிடந்தது குறித்து அப்பகுதியில் தகவல் பரவியதால் பொதுமக்கள் திரண்டனர். பிணமாக கிடந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என முதலில் கண்டறிவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.
இதற்கிடையே காரில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், கடன் தொல்லையால் தற்கொலை செய்வதாக எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் 5 பேரும் தற்கொலை செய்தது உறுதியானது.
இதைத்தொடர்ந்து காரின் வாகன பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர். இதில் அவர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் என தெரியவந்தது.
தொழில் அதிபர் குடும்பம்
இறந்தவர்கள் மணிகண்டன் (வயது 50), அவருடைய மனைவி நித்யா (48), மகன் தீரன் (22), மகள் நிகரியா (17), தாயார் சரோஜா (70) ஆகியோர் ஆவர். அவர்கள் சேலம் ஸ்டேட் பேங்க் காலனியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதில் மணிகண்டன் தொழில் அதிபர் ஆவார். அவருடைய மகன் தீரன் என்ஜினீயரிங் படிப்பும், மகள் நிகரியா சேலத்தில் ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படிப்பும் படித்து வந்தனர் என தெரியவந்தது.
காரில் முன்பக்க இருக்கையில் மணிகண்டனும், அவரது மனைவி நித்யாவும், பின்பக்க இருக்கையில் மகன் தீரன், மகள் நிகரியா, தாய் சரோஜா ஆகியோரும் பிணமாக கிடந்தனர். முன்பக்க இருக்கையில் இருந்த தம்பதி சீட் பெல்ட் அணிந்திருந்தனர். பின் பக்க இருக்கையில் இருந்தவா்கள் இருக்கையில் சுருண்டு விழுந்து கிடந்தனர். அவர்களது வாயில் நுரை எதுவும் இல்லை. வாய் திறந்த நிலையில் உதடுகள் கருத்திருந்தன. கைகளில் 3 பேருக்கு சிறிய காயம் ஏற்பட்டிருந்தது.
மதுபாட்டில்
காருக்குள் குவாட்டர் அளவு கொண்ட ஒரு காலி மதுபாட்டில், தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்கள், வெள்ளை நிற பொடி கொண்ட ஒரு பொட்டலம் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர். அந்த வெள்ளை நிற பொடி பொட்டலம் என்ன என்பது குறித்து ஆய்வுக்கு பின் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரல் ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், கார் மற்றும் காரில் இருக்கைகள் உள்ளிட்டவற்றில் தடயங்களை சேகரித்தனர். பின்னர் காரில் இருந்த 5 பேரின் உடல்களும் ஒவ்வொன்றாக இறக்கப்பட்டு, அடையாளங்கள் சேகரிக்கப்பட்டன.
காப்பர் வியாபாரம்
5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
அதில், மணிகண்டன் ‘எஸ்.எம். மெட்டல்ஸ்’ என்ற பெயரில் நாமக்கல், புதுக்கோட்டையில் காப்பர் கம்பெனி நடத்தியது தெரியவந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் மெட்டல் பொருட்கள் வாங்கி பணம் கொடுக்காத விவகாரத்தில் அவர் மீது கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் ஆனதும், அது தொடர்பாக விசாரணைக்கு அழைத்த நேரத்தில் மணிகண்டன் குடும்பத்துடன் தற்கொலை செய்ததும் தெரியவந்தது.
23-ந் தேதி வரவில்லை
இதுதொடர்பாக போலீஸ் வட்டாரத்தில் கூறுகையில், மணிகண்டன் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா அச்சமங்கலத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் ரூ.4 கோடி அளவுக்கு பொருட்கள் வாங்கி உள்ளார். அந்த பணத்தை அவர் கொடுக்காததால் அந்த நிறுவன உரிமையாளர் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் மணிகண்டன் கடந்த 23-ந் தேதி ஆஜராக வேண்டும் என அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அன்றைய தினம் அவர் ஆஜராகவில்லை. இதனால் அவரை 26-ந் தேதி (இன்று) ஆஜராக வேண்டும் என கூறப்பட்டது. இந்த நிலையில் தான் மணிகண்டன் குடும்பத்துடன் தற்கொலை செய்துள்ளார் என்றனர்.
தற்கொலை செய்தது எப்படி?
5 பேரும் காருக்குள் பிணமாக கிடந்த நிலையில், அவர்கள் தற்கொலை செய்தது எப்படி? என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அவர்கள் விஷம் அருந்தினார்களா? எந்த மாதிரியான விஷம்? காருக்குள் இருந்தவாறு கதவுகளை பூட்டி விட்டு ஏதேனும் விஷபொருளை ஏ.சி.யில் கலந்து அதனை சுவாசித்து தற்கொலை செய்தார்களா? என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.