எல்லை தாண்டிச்சென்று மீன் பிடித்ததாக வழக்கு; தமிழக மீனவர்களுக்கு ரூ.5 கோடி அபராதம், இலங்கை கோர்ட்டு தீர்ப்பு.
தூத்துக்குடி, செப்.4-
எல்லை தாண்டிச்சென்று மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து வைத்து இருந்தனர். அவர்களில் 12 பேருக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தற்போது இலங்கை கோர்ட்டு தீர்ப்பு அளித்து இருக்கிறது.
தமிழக மீனவர்களுக்கும், இலங்கை கடற்படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு நீடித்து வருகிறது.
தூத்துக்குடி மீனவர்கள்
தூத்துக்குடி தருவைகுளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி ஒரு படகில் 12 பேர் மீன்பிடிக்க சென்றனர். அதுபோல் 23-ந் தேதி 10 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் 22 பேரும் நடுக்கடலில் மீன்பிடித்துவிட்டு கடந்த 5-ந் தேதி திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி நுழைந்ததாக கூறி 22 மீனவர்களையும், 2 படகுகளையும் சிறைப்பிடித்து சென்றனர்.
இந்த சம்பவம் தூத்துக்குடி மீனவர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மீனவர்களையும், படகுகளையும் உடனே விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
சிறையில் அடைப்பு
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட 22 மீனவர்களும் இலங்கை கல்பிட்டி மீன்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தி மீன்பிடித்தல், கடல் வளத்தை அழித்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் உரிய விசாரணைக்கு பிறகு மீனவர்கள் புத்தளம் மாவட்டம் கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டனர்.
ரூ.5 கோடி அபராதம்
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அயோனா விமலரத்ன, முதலில் சென்ற படகில் இருந்த 12 மீனவர்களுக்கு தலா ரூ.1½ கோடி (அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் தலா ரூ.42 லட்சம்) அபராதம் செலுத்தவும், செலுத்த தவறினால் 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்தும் நேற்று தீர்ப்பு கூறினார்.
இந்த தீர்ப்பின்படி 12 பேருக்கும் இந்திய ரூபாய் மதிப்பின்படி மொத்தம் ரூ.5 கோடியே 40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.
மற்றொரு படகில் இருந்த 10 பேர் மீதான வழக்கு விசாரணையின் போது, படகு உரிமையாளரையும் சேர்க்க வேண்டும் என்று இலங்கை மீன்வளத்துறை கூறி உள்ளது. அதற்கு இந்திய தூதரகம் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து 10 பேர் மீதான வழக்கு வருகிற 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
குடும்பத்தினர் அதிர்ச்சி
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களும் மீட்கப்படாத நிலையில் அவர்களில் 12 பேருக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து இருப்பது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் மற்றும் மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மேல்முறையீடு
இதுகுறித்து தருவைகுளம் புனித நீக்குலாசியார் பருவலை விசைப்படகு சங்க தலைவர் சர்ச்சில் கூறியதாவது:-
ஒவ்வொரு மீனவருக்கும் அபராதம் விதித்து இருப்பது வேதனை அளிக்கிறது. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் மீனவர்களை மீட்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தீர்ப்பு பேரிடியாக உள்ளது
தருவைகுளத்தை சேர்ந்த காமராஜர் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் லாரன்ஸ் கூறுகையில், ‘இலங்கையில் பிடிபட்ட தருவைகுளம் மீனவர்களின் குடும்பம், இலங்கை நீதிமன்றம் விதித்து உள்ள அபராத தொகையை கட்டும் அளவுக்கு வசதி படைத்தவர்கள் இல்லை. அவர்களால் இலங்கைக்கு செல்லக்கூட முடியவில்லை. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் அழுது கொண்டு இருக்கின்றனர். மீனவர்கள் விடுவிக்கப்பட்டு விடுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் காத்து இருந்தவர்களுக்கு இந்த தீர்ப்பு பேரிடியாக வந்து உள்ளது.
இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற 2 விசைப்படகுகளிலும் பருவலை மூலம் மட்டுமே தொழில் செய்து வருகின்றனர். இந்த வலை இலங்கையில் தடை செய்யப்படவில்லை. இதனை கோர்ட்டில் எடுத்துக்கூற முடியாத நிலையில் உள்ளோம். இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் வக்கீலையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. மத்திய, மாநில அரசுகள் விசைப்படகு மற்றும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.