“உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு” என பரவும் பொய்யான செய்தி.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட, உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019 டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது.
இந்த ஊரக உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் முடிவடைகிறது.
இதையடுத்து, பதவி காலியாகும் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.
இதுதவிர, 2021-ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், நகர்ப்புற உள்ளாட்சிகள் மற்றும் தேர்தல் நடத்தாத 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த உறுப்பினர்களின் பதவிக்காலம் 2026-ம் ஆண்டு முடிவடைகிறது.
2026-ல் பேரவை தேர்தலும் வருவதால், முன்னதாகவே அதாவது இந்தாண்டே அனைத்து உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடத்த அரசு யோசித்து வருகிறது.
இந்நிலையில் சமூகவலைதளங்களில் தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஓர் செய்தி பரவி வருகின்றது.
பரவிய செய்தி:-
தமிழகத்தில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் எனவும் முதல்கட்டமாக டிசம்பர் 27-ம் தேதியும் 2-ம் கட்டமாக டிசம்பர் 30-ம் தேதியும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என தேதி அறிவிக்கப்பட்டதாக செய்தி சேனலின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
உண்மை என்ன:-
பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்றது ஆகும்.
தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்காக தேதி அறிவிக்கப்பட்ட செய்தியை தற்போது அறிவித்ததாகத் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்ய வேண்டாம்.