மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்குப்பதிவிற்கான படிவம் வினியோகம்.
புதுக்கோட்டை, மார்ச்.21-
புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்குப்பதிவிற்கான படிவம் வினியோகம் தொடங்கியது.
மாற்றுத்திறனாளி வாக்காளர்கள்
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,60,574 ஆண் வாக்காளர்களும், 6,75,969 பெண் வாக்காளர்களும், 62 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 13,36,605 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 85 வயதிற்கு மேற்பட்டுள்ள 5,417 ஆண் வாக்காளர்களும், 6,475 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 11,893 வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும் மாற்றுத்திறனாளிவாக்காளர்களான 5,586 ஆண் வாக்காளர்களும், 4,118 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 9,704 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிகளுக்கு வராமல் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்குப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
தபால் வாக்குப்பதிவு
இந்த நிலையில் 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தபால் வாக்குப்பதிவு செய்வதற்கான படிவம் அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று வழங்கும் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த பணி நேற்று முதல் தொடங்கியது.
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திருக்கோகர்ணம் அருங்காட்சியகம் அருகில், புதுதெரு அண்ணா நகரில் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களின் வீட்டிற்கு நேரில் சென்று தேர்தல் அலுவலர்கள் படிவம் வினியோகிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மெர்சி ரம்யா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். படிவத்தில் விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று தபால் வாக்குப்பதிவினை தேர்தல் அலுவலர்கள் மேற்கொள்வார்கள். விருப்பம் தெரிப்பவர்களின் மொத்த எண்ணிக்கை விவரம் பின்னர் தெரியவரும் என தேர்தல் அலுவலர்கள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
ஆலங்குடி
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியான ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி தலைமையில், ஆலங்குடி தாசில்தார் பெரியநாயகி முன்னிலையில், அதிகாரிகள் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு தபால் ஓட்டு போடுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது அவர்களிடம் அதற்குரிய படிவத்தை வழங்கி கைெயாப்பம் பெற்று கொண்டனர். அப்போது தேர்தல் வருவாய் அலுவலர் ரவி, வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.