உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் கானூர் முதல் திருப்புனவாசல் வரை சாலை அகலப்படுத்தப்பட்டது.
ஆவுடையார்கோவில், ஆக.12-
ஆவுடையார்கோவில் தாலுகாவில் கானூர்-திருப்புனவாசல் சாலை மிகவும் முக்கியமான சாலையாக உள்ளது.
இந்த சாலை மீமிசல் – அறந்தாங்கி சாலையில் (SH – 26) கானூர் கிராமத்தில் பிரிந்து பொன்பேத்தி, தீயத்தூர் வழியாக சென்று திருப்புனவாசலில் முடிவடைகிறது.
18 கிலோ மீட்டர் தூரம் கொண்ட போக்குவரத்து மிகுதியாக இருந்த கானூர்-திருப்புனவாசல் சாலை மிகவும் குறுகலாக ஒரு வழித்தடத்தில் பெரும்பகுதி இருந்து வந்தது.
இதனை விரிவுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையடுத்து தமிழக முதல்-அமைச்சர் கானூர்-திருப்புனவாசல் சாலையை அகலப்படுத்தி கொடுக்க அறிவுறுத்தியதன் பேரில், நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை அகலப்படுத்தி மேம்பாடு செய்ய அரசாணை பிறப்பித்து ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாலை அகலப்படுத்தப்பட்டது.
மேலும் சிறிய பாலங்கள் அனைத்தும் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது. 18 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையில் இன்னும் 2 கிலோ மீட்டர் மட்டுமே அகலபடுத்த வேண்டியுள்ளது. எனவே பொது மக்களின் கோரிக்கையை ஏற்று சாலையை விரிவாக்கம் செய்து கொடுத்த தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.