இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூடைகள் பறிமுதல்.
தூத்துக்குடி, அக்.9-
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகுமூலம் பீடி இலை மூடைகள், மஞ்சள் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் நடைபெறுவதும், அதனை போலீசார் பிடித்து வருவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு கடல் வழியாக பீடி இலை மூடைகள் கடத்தல் சம்பவம் நடைபெற இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானுக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் தெற்கு கடற்கரை சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டு பீச் ரோடு பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனையிட முயன்றனர். ஆனால் வாகனம் நிற்காமல் சென்றது, இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து விரட்டிச் சென்று இனிகோ நகரில் மடக்கி பிடித்தனர்.
இந்நிலையில் வாகனத்தை ஒட்டி வந்த டிரைவர் போலீசாரிடம் பிடிபடாமல் கீழே இறங்கி தப்பி ஓடினார்.
பின்னர் போலீசார் மினி லாரியை கைப்பற்றி அதை சோதனை செய்தபோது அதில் 35 கிலோ எடை கொண்ட பீடி இலை பண்டல்கள் 42 மூடைகள் இருந்தது தெரியவந்தது.
இதனை கடல் வழியாக படகுமூலம் இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது அதனைத் தொடர்ந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான பீடி இலை முடைகள் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதனை தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தப்பி ஓடிய டிரைவர் மற்றும் அதன் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.