இராமேசுவரத்தில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு:- அப்துல் கலாம் நினைவிடம் முதல் கடற்கரை வரை ரூ.35 கோடியில் புறவழிச்சாலை.
இராமநாதபுரம், ஆக.9-
இராமேசுவரத்தில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வுகாண அப்துல் கலாம் நினைவிடம் முதல் கடற்கரை வரை ரூ.35 கோடியில் புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.
போக்குவரத்து நெருக்கடி
அகில இந்திய புண்ணிய தலமான இராமேசுவரத்திற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதனால் இராமேசுவரத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இதனை சமாளிக்க மாவட்ட நிர்வாகம், போலீசார் சார்பில் ஒரு வழிப்பாதை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் அதிகரிக்கும் வாகன பெருக்கத்தால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்தே வருகிறது.
குறிப்பாக அமாவாசை, விடுமுறை, திருவிழா நாட்களில் இராமேசுவரத்திற்கு வர பெரும் சிரமம் ஏற்படுகிறது.
இதற்கு தீர்வுகாண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இராமேசுவரத்திற்குள் வாகனங்கள் வந்து செல்லாமல் நேரடியாக கோவில் பகுதிக்கு வந்து செல்லும் வகையில் புதிய புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.
இதன்படி இராமேசுவரம் அப்துல்கலாம் நினைவிடம் முதல் அக்னிதீர்த்த கடற்கரை வரை புதிய புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் நேரடியாக கோவில், கடற்கரை பகுதிக்கு செல்லும் வகையில் புறவழிச்சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது. 6.3 கி.மீ. தூரம் இச்சாலை அமைக்கப்பட உள்ளது.
புறவழிச்சாலை
சாலையில் 3 இடங்களில் வாகன பார்க்கிங், நகர் பகுதியை இணைக்கும் வகையில் சாலை அமைக்கப்பட உள்ளது. இருவழிச்சாலையாக 10 மீ அகலத்தில் சாலை அமைக்கப்படுகிறது.
இதற்காக ரூ.35 கோடி வரை செலவிட உள்ளது. வழித்தடங்கள் ஆய்வு, நில எடுப்பு, மின்கம்பங்கள் மாற்றி அமைப்பு போன்றவைகளுக்கு ரூ.20 லட்சம் ஆய்வு பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது.
இச்சாலை திட்டத்தில் 6.30 கி.மீ. தூரம் பெரும்பாலும் அரசு நிலங்களே கையகப்படுத்தப்பட உள்ளதாகவும், 18 எக்டேர் பரப்பளவிலான ஒரு சில கட்டிடங்கள் மட்டுமே தனியாரிடம் இருந்து வாங்கப்பட உள்ளதாகவும் இதற்காக ரூ.67 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
விரைவில் ஆய்வறிக்கை ஒப்படைக்கப்பட்டு நிதி பெறப்படும் என்றும், பணிகளை அடுத்த ஆண்டு மத்தியில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த புறவழிச்சாலை திட்டத்தால் இராமேசுவரம் பகுதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.