இராமநாதபுரத்தில் ரூ. 20 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்துநிலையத்தில் 90 சதவீத பணிகள் நிறைவு; அடுத்த மாதம் திறக்க ஏற்பாடு.
இராமநாதபுரம், அக். 21:
இராமநாதபுரத்தில் ரூ. 20 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்துநிலையத்தில் 90 சதவீத பணிகள் நிறைவு; அடுத்த மாதம் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
புதிய பேருந்துநிலையம்
இராமநாதபுரம் மக்களின் தேவைக்கேற்ப, புதிய பேருந்துநிலையத்தை விரிவாக்கம் செய்து, நவீனமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ. 20 கோடியில் புதிய பேருந்துநிலையம் கட்ட, அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்காக பேருந்துநிலையத்தில் இருந்த கடைகள் மூடப்பட்டு, அவர்களுக்கு பழைய பேருந்துநிலையத்தில் சங்கத்தின் ஒப்புதலின் படி கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, பேருந்துநிலையக் கட்டிடம் முழுவதும் இடித்து, கடந்த ஆண்டு தரைமட்டமாக்கப்பட்டது.
இந்த புதிய பேருந்துநிலையம் 4.1 ஏக்கர் பரப்பளவில், 35 பேருந்துகள் ஒரே நேரத்தில் நின்று செல்லும் வகையில் அமைவதோடு, பேருந்துநிலைய வளாகப் பகுதியில் 50 பேருந்துகள் நிற்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதைத்தவிர, பேருந்துநிலையத்தில் மக்களின் வசதிக்காக 92 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 231 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், கார்களை பயன்படுத்தி பயணிகளை இறக்கி விட அணுகு சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் திறக்க ஏற்பாடு
இதுநாளும், தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை, பாதுகாப்பு நிலையம், முன்பதிவு அறை, உணவகங்கள் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 8 கழிப்பறைகள் வீதம் 16 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பயணிகள் நடப்பதற்கு ஏதுவாக பெய்வர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. பேருந்துநிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேர கண்காணிப்பு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய கட்டுமான பணிகள் இரவு பகலாக நடைபெற்று, தற்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளை விரைந்து, ஓரிரு வாரங்களில் முடித்து ஒப்படைக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் புதிய பேருந்துநிலையம் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன்மூலம் இராமநாதபுரம் பேருந்துநிலைய இட நெருக்கடி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.