மீமிசல் அருகே தீயத்தூரில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; பெண் படுகாயம்.
ஆவுடையார்கோவில், ஜூன்.26-
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து ROS என்ற தனியார் பேருந்து ஒன்று இராமநாதபுரம் மாவட்டம், தொண்டிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.
பின்னர் அங்கிருந்து 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆவுடையார்கோவில் நோக்கி பஸ் வந்தது. மீமிசல் அருகே தீயத்தூர் பகுதியில் வந்தபோது, அந்த வழியாக சென்ற வாகனத்திற்கு வழிவிடுவதற்கு தனியார் பேருந்து டிரைவர் சாலையோரமாக பேருந்தை ஒதுக்கியபோது எதிர்பாராதவிதமாக பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பேருந்தில் இருந்த பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த இராமநாதபுரம் மாவட்டம், சொணக்கோட்டையை சேர்ந்த ராமு மனைவி ஜோதி (வயது 30) என்பவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருப்புனவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.