ஆடம்பர திருமணத்திற்கு எதிர்ப்பு: பள்ளிவாசல் மூடப்பட்டதால் பரபரப்பு.
ஆலங்குடி, ஆக.12-
ஆலங்குடி அருகே ஜமாத் கட்டுப்பாட்டை மீறி நடந்த ஆடம்பர திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளிவாசலை பூட்டிய ஜமாத் நிர்வாகத்தினர்.
ஆலங்குடி அருகே காசிம் புதுப்பேட்டையை சேர்ந்த ஆணுக்கும், மேலக்காட்டை சேர்ந்த பெண்ணுக்கும் இஸ்லாமிய முறைப்படி ஆலங்குடி அருகே மேலக்காடு ஜமாத்தில் தான் திருமணம் நடக்க வேண்டும் என கூறப்படுகிறது.
ஆனால் காசிம் புதுப்பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் திருமணம் நடைபெறுவதாக கூறிக் கொண்டு காசிம் புதுப்பேட்டை பகுதியில் மணமகன் ஊர்வலமாக பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார்.
ஆனால் இஸ்லாமிய முறைப்படி பட்டாசு வெடித்து ஜமாத் கட்டுப்பாட்டுக்கு எதிராக ஆடம்பரமாக திருமணம் செய்வதாக அந்த கிராமத்தை சேர்ந்த ஜமாத் தலைவர் தலைமையில் ஒரு தரப்பினர் பள்ளி வாசலை இழுத்து மூடிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மணமகன் தரப்பினர் அங்கு வந்த போது பள்ளிவாசல் மூடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பள்ளிவாசல் திறக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.