அறந்தாங்கி வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா.
அறந்தாங்கி, செப்.30-
அறந்தாங்கி வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடை பெற்றது. விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வர்த்தக சங்கத்தின் 2024-27-ம் ஆண்டின் முதல் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா அறந்தாங்கியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு வர்த்தக சங்க தலைவர் தங்கதுரை தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அஞ்சலி நல்லெண்ணெய் உரிமையாளர் டாக்டர் செந்தில்நாதன் கலந்து கொண்டார்.
அறந்தாங்கி வர்த்தக சங்கத்தின் மூத்த முன்னாள் தலைவர் சுப்பிரமணியன் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு நிகழ்ச்சியை நடத்தினார்.
புதிய நிர்வாகிகள்
- புதிய தலைவராக ஆடிட்டர் தங்கதுரை,
- செயலாளராக செலக்சன் சுரேஷ் குமார்,
- பொருளாளராக முகமது ஹாரிஸ்
ஆகியோர் பொறுப்பு ஏற்று கொண்டனர்.
நலத்திட்ட உதவிகள்
விழாவில் 3 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பெண் ஒருவருக்கு தையல் இயந்திரம், 2 சாலையோர வணிகர்களுக்கு நிழற்குடை வழங்கப்பட்டது.
தீர்மானங்கள்
அறந்தாங்கி வர்த்தக சங்கத்தின் தலைவராக ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் மறுமுறை தலைவர் தேர்தலில் போட்டியிட அனுமதி இல்லை.
தலைவருடைய பதவி காலம் நிறைவடைவதற்கு ஒரு மாதம் முன்பாக புதிய தலைவரை தேர்வு செய்து தற்போதைய தலைவர் அதற்கான முன்னெடுப்பை எடுத்து குழு அமைத்து முறைப்படுத்திட வேண்டும்.
அரசு பாதாளசாக்கடை திட்டம் அல்லது மூடிய கழிவு நீர் வாய்க்காலை திறந்து வைக்க மீண்டும் நிதி ஒதுக்கி நிறைவேற்றி தர அரசுக்கு கோரிக்கை வைப்பது.
தினசரி அறந்தாங்கி-சென்னை ரெயில் சேவையை ரெயில்வே துறையினர் நடைமு றைப்படுத்த வேண்டும்.
ஆண்டு வரவு, செலவு கணக்குகளில் வெளிப்பட தன்மை பின்படுத்தப்படும்.
திருவிழா வரவு, செலவு தனி கணக்காக காண்பிக்கப்பட்டு சிக்கனமாக செய்யப்பட்டு மீதத்தொகை சங்க வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
அறந்தாங்கி கோட்டை சங்கங்கள் அமைத்து அறந்தாங்கி வர்த்தக சங்கம் பொதுக்குழு உறுப்பினர்களாக இணைந்து அறந்தாங்கி நகரில் வர்த்தக சின்னம் நிறுவப்படும்.
ரெயில்வே கால அட்டவணை நகரில் பொதுவான இடங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
அறந்தாங்கி வர்த்தக சங்கத்திற்காக வழங்கப்படும் மாவட்ட, மாநில பொறுப்புகள் அனைத்தும் நடைமுறையில் உள்ள தலைவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
என்பன உள்பட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.