அறந்தாங்கி தீ விபத்து: நகை கடையில் ஏற்பட்ட மின் கசிவே காரணம், முதற்கட்ட விசாரணையில் தகவல்.
அறந்தாங்கி, மார்ச்.26-
அறந்தாங்கியில் நகை, பட்டாசு, பாத்திர கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.
நகைக்கடையில் தீவிபத்து
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சந்தைப்பேட்டை சாலையில் நகைக்கடை உள்ளது. அதன் அருகில் பாத்திர கடையும், பட்டாசுக்கடையும் அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ளது. நேற்று காலை 6 மணிக்கு நகைக்கடையில் இருந்து திடீரென புகை வெளிவந்தது. பின்னர் தீப்பிடித்து அருகில் உள்ள பட்டாசு கடைக்கும் தீ பரவியது. இதனால் பட்டாசு கடையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறின. இதில் கடையில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இந்த தீ நகைக்கடை, பாத்திர கடைக்கும் பரவியது. இந்த தீ விபத்தால் சந்தைப்பேட்டை சாலையே புகைமூட்டமாக மாறியது.
இதற்கிடைேய அருகில் உள்ள கடைகளுக்கும் தீ பரவ தொடங்கியது. இதுகுறித்து அறந்தாங்கி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க போராடினர். ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
இதற்கிடையே ஆவுடையார்கோவில், கீரமங்கலம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க போராடினர். 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் பாத்திர கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அலுமினியம், பித்தளை, எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமானது. நகைக்கடையில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் சேதம் அடைந்த விவரம் தெரியவில்லை. ஆயினும் மூன்று கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் கோடி ரூபாய் பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவித்தனர்.
காரணம் என்ன?
இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நகைக்கடையில் ஏற்பட்ட மின்கசிவால் மற்ற கடைகளுக்கும் தீ பரவியது தெரியவந்தது.
அறந்தாங்கியில் நகைக்கடை உள்ளிட்ட 3 கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.