அறந்தாங்கி அருகே வாக்களிப்பதன் அவசியம் குறித்து டிராக்டரில் விழிப்புணர்வு ஊர்வலம்.
அறந்தாங்கி, மார்ச்.26-
அறந்தாங்கி அருகே நாகுடியில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து டிராக்டர் மூலம் நூதன முறையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அறந்தாங்கி கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமை தாங்கினார். அறந்தாங்கி தாசில்தார் திருநாவுக்கரசு, அறந்தாங்கி மண்டல துணை தாசில்தார் பாலமுருகன், தேர்தல் துணை தாசில்தார் இளஞ்சேரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாக்களிப்பதன் அவசியம் குறித்து பேனருடன் நாகுடி கடைவீதியில் 30-க்கும் மேற்பட்ட டிராக்டரில் ஊர்வலமாக சீனமங்கலம், வெட்டிவயல், பெருங்காடு, கூத்தங்குடி, வைரிவயல், அறந்தாங்கி, கட்டுமாவடி முக்கம் வழியாக அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் டிராக்டர்களில் ஜனநாயகம் தழைக்க வாக்களிப்போம், ஆதார் 6-பி படிவம் பயன்படுத்துவோம் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து தேர்தல் அதிகாரி சிவக்குமார் முன்னிலையில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் வருவாய் ஆய்வாளர் சுகந்தா, கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.